நான் ஈ - 2012 - இந்திய சூப்பர் 'ஈ'ரோ!

இயக்குனர் மற்றும் நடிகர்களை தவிர்த்து, ஒரு படத்தின் ஓபனிங்கை தீர்மானிப்பது இரண்டு விஷயங்கள் - பாடல்கள், படத்தின் ட்ரைலர்! நான் ஈக்கு இரண்டாவதாக சொன்னது வொர்க் அவுட் ஆகியுள்ளது! டைரக்டர் ராஜமௌலியின் படங்கள் மகதீரா (தமிழ் டப்பிங்) தவிர்த்து வேறு எதையும் பார்த்ததில்லை! அந்த படமும் அவ்வளவாக என்னை கவரவில்லை - சிறுத்தை, கஜேந்திரா போன்ற காவியங்களின் மூலங்களை தெலுங்கில் இயக்கியவர் என்பதால் தெலுங்கு வாடை அதிகம் இருக்குமோ என்ற சந்தேக உதறல் வேறு! அவர் என்னத்தான் பேட்டிகளில், இது ஒரு இருமொழிப்படம்  என கற்பூரம் அடித்து சத்தியம் செய்திருந்தாலும் படத்தில் நடிக்கும் முகங்கள் அவர் சத்தியத்துக்கு எவ்விதத்திலும் வலு சேர்க்கவில்லை! எனவே நெட்டில் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என பார்த்து விட்டு இந்த படத்தை பார்த்துக்கொள்ளலாம் என மதியம் லைட்டாக கூகிளை மேய்ந்து... கட் .. ப்ளாக் எழுத ஆரம்பித்ததில் இருந்து நான் பார்க்க விரும்பும் படங்களின் விமர்சனங்களை வரலாறு பரீட்சைக்கு படிப்பது போலதான் படிக்கிறேன் - முதல் இரண்டு வரிகள், நடுவில் இரண்டு அப்புறம் கடைசி இரண்டு வரிகள்!  .. அப்புறம் .. 'ஈ'வ்னிங் ஷோ லாவண்யாவில் (உடன் அல்ல!) உட்கார்ந்திருந்தேன்! ;)

கதைச் சுருக்கம்: ஈ அளவு கதைதான் - தொழிலதிபர் சுதீப் ஒரு ப்ளேபாய், டொனேஷன் கேட்டு வரும் சமந்தாவுடன் விளையாட நினைக்கிறார் ;) அதற்கு தடையாக, சமந்தாவின் எதிர் வீட்டுக் காதலன் நானி (நான் ஈ இவர்தான் - வெப்பம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர்!). எரிச்சலாகும் சுதீப், நானியை நசுக்கிக் கொல்ல அவர் ஈயாக மறுபிறப்பெடுத்து, சுதீப்பை தீயாக பழி வாங்குகிறார்! :D

'ஈ'ஸியான இந்த இரண்டு வரிக்கதைக்கு திரைக்கதை எழுதி அதை படமாக்கிய முறையில்தான் இந்த படத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது! இது போன்ற Fantasy படங்களில் பெரும்பாலும் லாஜிக் என்ற வஸ்து இருக்காது, அதை எதிர்பார்ப்பதும் தவறு! ஆனால் இந்த ஒரு ஓட்டையை பயன்படுத்திக்கொண்டு படம் பார்க்க வருபவர்களை முட்டாளாக எண்ணி இஷ்டத்துக்கும் கதையளக்கும் இயக்குனர்களின் மத்தியில் ராஜமௌலி புத்திசாலிதனமாக மாறுபட்டிருக்கிறார்! 'மனித புத்தியுள்ள பழிவாங்கும் ஈ' - இதை மட்டும் நாம் லாஜிக் பார்க்காமல் ஏற்றுக்கொண்டால் போதும், படத்தில் வரும் வேறு ஒவ்வொரு காட்சிகளும் பார்வையாளனை முட்டாளாக்காத சாமர்த்தியப் பின்னல்கள் - தரமான CG தொழில்நுட்பத்தின் உதவியுடன்!

ஒவ்வொரு முக்கிய பாத்திரமும் இதற்கேற்பவே வடிவமைக்கப்பட்டுள்ளன! சுதீப் ஒரு ஷார்ப் ஷூட்டர்! சமந்தா ஒரு மைக்ரோ ஆர்டிஸ்ட் (நுண்பொருள் சிற்பி!) - ஏன் இந்த வித்தியாச பொழுதுபோக்கு கொண்ட கதாபாத்திரங்கள் என்பதன் விடை படம் பார்க்கப் பார்க்கப் புரிந்துவிடுகிறது! நானி, சமந்தா இடையேயான காதல் காட்சிகள் ரொம்பவே ஸ்வீட்! கதைப்படி நானிதான் ஹீரோ என்றாலும், அரை மணிநேரத்தில் மண்டையை போட்டுவிடுகிறார் - அதற்கப்புறம் ஈயின் முழுநீள சாகசங்கள்தான்! சமந்தா காதல் காட்சிகளில் மிக அழகான முகபாவங்களை காட்டுகிறார், மற்ற காட்சிகளில் படுபாவமாக இருக்கிறார்! :) நானி - ஈயாக மறுபிறப்பெடுத்ததும், க்ளோசப்பில் காட்டப்படும் அந்த ஐந்து நிமிட CG - ஈ காட்சிகள் கவிதை! படத்தின் ஒவ்வொரு செட்டும் பார்த்து பார்த்து இரசனையுடன் அமைக்கப்பட்டுள்ளன!

தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகியிருக்கும் இந்த படத்தின் வில்லனாக கன்னட முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சுதீப்பை நடிக்க வைத்திருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம்! சுதீப்பின் திரை வாழ்க்கையில் இது ஒரு மறக்கமுடியாத படமாக அமையும் - அனுபவித்து நடித்திருக்கிறார்! ஆரம்ப காட்சிகளில் ஓவர் ஆக்டிங் செய்வது போல தோன்றினாலும் இந்த மாதிரியான படங்களில் இந்த வகை நடிப்பு மிகவும் அவசியம் என்பதால் இரசிக்க முடிகிறது! இல்லாத ஒரு கிராபிக்ஸ் ஈயை, கண்ணெதிரில் இருப்பது போல் கற்பனை செய்து கொண்டு நடிப்பது ஒன்றும் அவ்வளவு லேசுபட்ட காரியம் இல்லை! ஹீரோ ஈ, சுதீப்பின்  காதிலும், மூக்கிலும் மாறி மாறி நுழைந்து கிச்சு கிச்சு மூட்டும் போது, கிச்சா (சுதீப்பின் பட்டப்பெயர்!) காட்டும் ரியாக்ஷன்கள் - அ ஆ இ ஈ - ஹி ஹீ :) :) :) ஈயும், சுதீப்பும் மோதும் ஒவ்வொரு காட்சிகளும் செம ஸ்பீட்! - விலாவாரியாக சொல்லி படத்தின் சுவாரசியத்தை குறைப்பதாய் இல்லை!

தெலுங்குபட விதிமுறைகளை மீறாத - திடீர் மந்திரவாதி தோன்றும் பத்து நிமிட காட்சி, சிறிய சறுக்கல்தான் என்றாலும் அது படத்தின் வேகத்தை எவ்விதத்திலும் மட்டுப்படுத்தவில்லை - இந்திய டச் இருக்க வேண்டும் என்பதால் இணைத்த காட்சியென்று நினைக்கிறேன்! இது தமிழ் படம்தான் என்று நம்பவைப்பதற்காக சந்தானத்தை ஒரே ஒரு நிமிடம் காட்டுகிறார்கள் - மனிதருக்கு தியேட்டர் முழுக்க ரசிகர்கள்! :) தமிழில் கிரேஸி மோகன் வசனம் எழுதியிருக்கிறார் - நல்ல வேளையாக கமல்+கிரேஸி படங்களின் வசன பாணியில் இல்லாமல் இயல்பாக உள்ளது! பாடல்கள் நினைவில் தங்கவில்லை. 'ஈடா ஈடா ஈடா' என்று அவ்வபோது வரும் பன்ச் மியூசிக்கை(!) தவிர்த்திருக்கலாம்! பின்னணி இசை அருமை!

அப்படி எல்லாம் ஈஸியாக குழந்தைகள் படம் என முத்திரை குத்தி விட முடியாது  - சில காட்சிகளில் வன்முறை அதிகம்! இந்திய பாண்டஸி பட வரிசைகளில் இது ஒரு முக்கிய படமாக அமையும்! ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களை குடும்பத்தோடு சென்று பார்ப்பதில்லையா? அதற்கான முழுத் தகுதியும் இந்த சூப்பர் 'ஈ'ரோ படத்திற்கு உள்ளது! ஒரு தரமான காமிக்ஸ் படித்த திருப்தி கிடைப்பது நிச்சயம்! இது இந்த படத்தின் காப்பி என்ற ரீதியில் கட்டுரைகள் வராமல், இந்த படத்தின் உரிமையை இந்த ஹாலிவுட் நிறுவனம் வாங்கியுள்ளது என்ற செய்தி மட்டும் விரைவில் வந்தால் - ஒரு இந்தியனாக காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம்! :)

நான் ஈ - 2012 / **** / Fantasy + Sci-Fi ஜாலி மிக்ஸ்!

கருத்துகள்

  1. நல்ல விமர்சனம். என் நண்பர் தான் இந்த CG பண்ணி இருக்கிறார். நிச்சயம் பாக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவருக்கும், அவரின் டீமுக்கும் வாழ்த்துக்கள்! :)

      நீக்கு
  2. இதோ கிளம்பிட்டோமில்ல..தியேட்டர்க்கு... ஈ ஓட்ட :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூட்டத்தைப் பார்த்து உங்க முகத்துல ஈயாடியிருக்காதே?! ;)

      நீக்கு
  3. எனக்கு அப்பவே தெரியும் ராஜமௌலி ஹிட் கொடுத்து விடுவார் என்று நல்லாவே விமர்சனம் எழுதுறிங்க நேற்றே நானும் பார்த்து விட்டேன் ஒரு பாட்டு மட்டும் பிடித்து இருந்தது...காதல் காட்சி அதிகம் இல்லை அதை எதிர் பார்த்துதான் போனேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் எடுத்த மத படங்கள கம்பேர் பண்ண இந்த படத்தோட காதல் காட்சி பெஸ்ட் அப்படின்னு பேசிக்கறாங்களே?

      நீக்கு
    2. ஆமாம் நண்பா நிஜம்மா கொஞ்ச நேரம் தான் லவ் ஸின் அதுவே ரொம்ப சூப்பர் நான் லவ் காட்சி பார்க்க தான் போனேன் நிறைய இல்லை...அதிகமாய் வைத்து இருந்தால் படம் சொதப்பி இருக்கும்...

      நீக்கு
  4. நானும் பார்பதற்கு உள்ளேன்.
    விமர்சனம் நன்றாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  5. good review . surely makes one to go theater after reading this review . // ஹீரோ ஈ, சுதீப்பின் காதிலும், மூக்கிலும் மாறி மாறி நுழைந்து கிச்சு கிச்சு மூட்டும் போது, கிச்சா (சுதீப்பின் பட்டப்பெயர்!) காட்டும் ரியாக்ஷன்கள் - அ ஆ இ ஈ - ஹி ஹீ :) :) :) Awesome

    பதிலளிநீக்கு
  6. // இந்த படத்தின் உரிமையை இந்த ஹாலிவுட் நிறுவனம் வாங்கியுள்ளது என்ற செய்தி மட்டும் விரைவில் வந்தால் - ஒரு இந்தியனாக காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம்! :) //

    சூப்பர் தல! கனவு நனவாகவேண்டும் :-)

    பதிலளிநீக்கு
  7. கருத்தை தெரிவித்த, தெரிவிக்காத அனைத்து நண்பர்களுக்கும் நன்றி! பதிவிட்ட 24 மணிநேரத்தில் என் ப்ளாக்கின் ஆல் டைம் டாப் 5-இல் ஈயாக நுழைந்த சாதனைப் பதிவு இது! :D

    பதிலளிநீக்கு
  8. The fly could NOT be the reason. :)
    But I sincerely believe that the real reason is, you are becoming conspicuous. Your posts are engaging and interesting.

    Good luck.

    பதிலளிநீக்கு
  9. //http://dohatalkies.blogspot.com/2012/07/hachi-dogs-story-tale-movie-review.html//
    :) முதலில் இது எந்த மொழி Font என்று கூற முடியுமா? ;)

    பதிலளிநீக்கு
  10. 'மனித புத்தியுள்ள பழிவாங்கும் ஈ' - இதை மட்டும் நாம் லாஜிக் பார்க்காமல் ஏற்றுக்கொண்டால் போதும்...

    தேவையே இல்லை. ஒரு அப்பா தன் மகளுக்கு சொல்லும் ஒரு கற்பனை கதை தான் இது என்பதை இயக்குனர் சொல்லிவிடுவதால் 'லாஜிக்' ஒரு மேட்டரே இல்லை.

    பதிலளிநீக்கு
  11. 'மனித புத்தியுள்ள பழிவாங்கும் ஈ' - இதை மட்டும் நாம் லாஜிக் பார்க்காமல் ஏற்றுக்கொண்டால் போதும்...

    தேவையே இல்லை. ஒரு அப்பா தன் மகளுக்கு சொல்லும் ஒரு கற்பனை கதை தான் இது என்பதை இயக்குனர் சொல்லிவிடுவதால் 'லாஜிக்' ஒரு மேட்டரே இல்லை.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia