வன்மேற்கின் வஞ்ச நெஞ்சங்கள் - முத்து காமிக்ஸ் வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷல்!

எச்சரிக்கை: இந்தப் பதிவில் முழுக்கதையும் சொல்லப்பட்டிருக்கிறது. கதைநாயகன் நாதன் சிஸ்லிமின் 14 வயது இளம்பிராயப் பார்வையில் விரிவதாய் அமையும் இந்தக் கதை Spaghetti வெஸ்டர்ன் படங்களின் ஆரம்பக் காட்சிகளுக்கு சற்றும் சளைத்ததில்லை! வறண்ட, பரந்த பாலைப் பரப்பில் ஊர்ந்து வந்து வ்யோமிங்கில் உள்ளதொரு சிறு நகரில் நிலை கொள்ளும் அந்தப் புகை வண்டி நம்மை ஒரு கனத்த கதைக்குள் இட்டுச் செல்கிறது! அம்ப்ரோசியஸ் வான் டீர் என்ற செல்வந்தர் தன் மறைந்த சகோதரரின் தொலைந்த புதல்வன் எட்வின் வான் டீரை தேடுகிறார், கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஆயிரம் டாலர்கள் பரிசு என்ற அறிவிப்புடன். பாசத்தினால் அல்ல, அவனை அழித்து முழு சொத்தையும் தனதாக்கிக் கொள்ள! இதை அறியாத நாதனின் அண்ணன் ஜெஸ் சிஸ்லிம், தனது தம்பியை எட்வினாக நடிக்கச் சொல்லி அம்ப்ரோசியஸிடம் பரிசுத் தொகையை கறக்க எண்ணுகிறான்.

எட்வினை அழிக்கும் எண்ணத்துடன் அந்தப் புகை வண்டியில் தன் சின்னஞ்சிறு மகள் கேத்தியுடன் வந்திறங்கும் அம்ப்ரோசியஸை ஜெஸ் சந்தித்து எட்வினாக நடிக்கும் தன் தம்பி நாதனின் மறைவிடத்திற்கு இட்டுச் செல்கிறான். அங்கு நடக்கும் குழப்பத்தில், ஜெஸ் அம்ப்ரோசியஸின் அடியாளால் கொல்லப்படுகிறான். அடுத்து நாதனின் நெஞ்சைக் குறிவைத்துப் பாயும் தோட்டா அவன் விலகிக்கொள்வதால் குறி தவறி அவனுடைய இடது கையைப் பதம் பார்க்கிறது.  சுதாரித்துக்கொள்ளும் நாதன் அம்ப்ரோசியஸையும் அவரின் அடியாளையும் சுட்டுக் கொன்று துப்பாக்கி மற்றும் பணமுடிச்சு சகிதம் கிளம்பும் சமயம் - முழு விவரமும் புரியாமல் குழப்பத்தில் திகைத்து நிற்கும் சிறுமி கேத்தியின் பெருவிழிகளை ஒரு சில கணங்கள் எதிர்கொண்டு பின்னர் தப்பியோடுகிறான் - இவ்வாறாகத்தான் அவர்கள் முதல் சந்திப்பு நடக்கிறது!
சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப எண்ணும் நாதன், வ்யோமிங்கை விடுத்து குதிரையில் இரவு பகல் பாராமல் ஒரு நீண்ட நெடிய, கொடிய பயணத்தை மேற்கொள்கிறான். பயணத்தின் முடிவில் சிகிச்சையின்றி புரையோடிப் போன இடது கையை இழக்க நேர்கிறது! நேட் கோல்டன் என பெயரை மாற்றிக்கொண்டு அடுத்த பத்தாண்டுகளுக்கு ஒதுங்கி வாழ்ந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் ஒற்றைக்கையால் துப்பாக்கி சுடுவதில் தேர்ச்சி பெற்று, தனது 25வது வயதில் ஒரு தீர்மானத்துடன் கான்சாசில் உள்ள விச்சிடா நகருக்கு செல்கிறான் - வான் டீர் குடும்பம் வசிக்கும் இடம் அதுதான். அந்நகரின் ஷெரீஃப் ஸாம், நேட்டுக்கு வேலை வழங்க எண்ணி அவன் துப்பாக்கி சுடும் திறமையை பரிசோதிக்கிறார். அந்தத் தேர்வில் ஏனோ நேட் சொதப்பிவிடுகிறான். இருந்தாலும், ஒற்றைக்கை நேட்டை அந்நகரின் வங்கிக்கு பாதுகாவலனாக ஷெரீஃப் நியமிக்கிறார், சில நாட்கள் சுகமாக கழிகின்றன!

ஒரு நாள் ஷெரீஃப் தனது டெபுடியை அழைத்துக்கொண்டு ஒரு கண்காணிப்பு வேலைக்காக விச்சிட்டாவை விட்டு செல்கிறார் - அது ஒரு திட்டமிட்ட ஜோடிப்பு! ஷெரீஃப் இல்லாத ஊரில், ஒற்றைக்கை பாதுகாவலனால் கொள்ளைக் கும்பலை எதிர்த்து என்ன செய்து விடமுடியும்?! நேட் தேர்வில் தோற்றாலும் வேலைக்கமர்தப்பட்டது இந்த திட்டத்தின் ஒரு அங்கம்தானே - வங்கிக் கொள்ளையர்களின் கூட்டாளி அல்லவா விச்சிட்டாவின் ஷெரீஃப்?! வங்கியில் நுழையும் கொள்ளையர் துப்பாக்கி சூடு நடத்தும் சமயம் குறுக்கே நுழையும் ஒரு அழகிய இளம்பெண்  நேட்டால் காப்பாற்றப் படுகிறாள். நேட்டாக மாறி நிற்கும் நாதன், அழகிய இளம் பெண்ணாக வளர்ந்து நிற்கும் கேத்தி வான் டீரின் மயக்கும் விழிகளை தன் வாழ்வில் இரண்டாவது முறையாக எதிர் கொள்வதும் துப்பாக்கி முழக்கத்தினூடேதான் நிகழ்கிறது!

நேட்டின் உண்மையான திறமையை உணராமல், கையாலாகதவன் என எண்ணி வரும் கும்பல் கைலாசம் போய் சேர்க்கிறது! நேட் ஒரே நாளில் நகரின் நாயகன் ஆகிறான், அனைவரின் அன்பையும் பெறுகிறான் - அதாவது ஒரு நபர் நீங்கலாக - ஷெரீஃப்தான் அந்நபர்! நேட்டைப் பற்றிய உண்மை அறியாத கேத்தி அவனை தன் பரந்த பண்ணையின் பாதுகாவலனாய் சேருமாறு அழைப்பு விடுக்கிறாள்! முதலில் அவ்வாய்ப்பை மறுக்கும் நேட், ஷெரீஃப்பால் மிரட்டப்பட்டு நகரை விட்டே விரட்டப்பட்டதும், கேத்தியின் பண்ணையில் வேலைக்கமர்கிறான். தனது 25வது வயதில் விச்சிட்டாவை நோக்கி ஒரு தீர்மானத்துடன் கிளம்பியது வான் டீர் குடும்பத்தின் வாரிசாக தன்னைப் பிரகடனப் படுத்திக்கொள்ளத்தான் - அதற்கான தான் ஜோடித்த ஆதாரங்களை வான் டீர் குடும்பத்திடம் காட்டி எட்வின் வான் டீராக பரிணாமம் அடைகிறான் நாதன் என்ற நேட்! அம்ப்ரோசியஸ் இன்னமும் உயிருடன் இருக்கும் அதிர்ச்சியான உண்மை அச்சமயத்தில் வெளியானாலும் அவர் பாரிச வாயு நோயால் முடக்கப்பட்டு, உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத நடைபிணமாக இருப்பது 'எட்வினுக்கு' ஆறுதலை தருகிறது!

ஆனால் நேட் எடுத்த தீர்மானத்தின் ஒரு பகுதிதான் இந்த வாரிசுப் படலம் என்பதை முதலிலேயே தெளிவாக சொல்லாமல் விட்டது இந்த கதையை தமிழில் மொழிபெயர்த்தவரின் தவறா அல்லது கதாசிரியர் வேண்டி விரும்பிச் செய்ததா என்பது இதன் ஃபிரெஞ்சு மூலத்தை படித்தவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். ஆம், முதல் சந்திப்பிலேயே சிறுவன் நாதன் கேத்தியின் கண்களில் தன் மனதை பறிகொடுத்து விட்டிருக்கிறான் என்பது கதையின் இறுதி கட்டத்தில்தான் புலனாகிறது. தன் காதலை எட்வினாக கேத்தியிடம் சொல்லும்போதுதான்  அவர்கள் சகோதர சகோதரியாக மாறிவிட்டிருக்கும் கொடுமையான உண்மை அவனுக்கு உறைக்கிறது! தொடரும் தொல்லையாக, ஷெரீஃப் ஸாம் - வ்யோமிங் நகர ஷெரீஃப்பை அழைத்து வந்து எட்வின் ஆக நடித்துக் கொண்டிருக்கும் நேட் என்ற நாதன்தான் அம்ப்ரோசியசை நடைபிணமாக்கி, அவர் அடியாளை சுட்டுக் கொன்ற நபர் என்ற உண்மையை போட்டுடைக்கிறார்! எட்வின் என்ற அந்தஸ்து பறிக்கப்பட்டு தப்பியோடும் நேட், காவலர்களால் சுடப்பட்டு வீழ்கிறான். அவனால் காதலிக்கப்பட்ட கேத்தி கண்ணீருடன் அவனை வெறிக்கும் காட்சி அவன் வாழ்வின் கடைசி தருணமாகிப் போகிறது! அவள் கண்களில் தெரிந்தது பச்சாதாபமா இல்லை காதலா என்ற கேள்விக்கு விடையின்றி பரிதாபமாக இறந்து போகிறான் நேட்!

நாற்பது வருடங்கள் உருண்டோடுகின்றன. சோகத்தின் உச்சமாய் ஒரு உச்சகட்ட காட்சியில், மரணப் படுக்கையில் படுத்திருக்கும் வஞ்சக ஷெரீஃப் ஸாம் - நேட்டின் நினைவில் திருமணம் புரியாமல் வாழும் 'மூதாட்டி' கேத்திக்கு அழைப்பு விடுத்து ஒரு 'உண்மையான' உண்மையை போட்டுடைக்கிறார். தகுந்த ஆதாரங்களுடன் கேத்திக்கு ஷெரீஃப் விளக்கும் அதிர்ச்சித் தகவல் இதுதான் - 'கேத்தி... நீ மனதோரம் நேட் மேல் காதல் கொண்டிருந்ததை நானறிவேன். நேட் பொய் சொல்வதாக நினைத்துக் கொண்டு தன்னை வான் டீர் குடும்ப வாரிசு எட்வின் எனச் சொல்லி ஏமாற்றி இருந்தாலும், அவனே அறியாத உண்மை அவன்தான் உண்மையான எட்வின் என்பது'. மரணத்தின் விளிம்பிலும், மரணித்த நேட்டின் முதுகில் குத்தி, கேத்தியை கொடும் துன்பத்தில் ஆழ்த்திய இன்பத்தில் கிழட்டு ஷெரீஃப் பெரும் குரூர சிரிப்பை உதிர்ப்பதாய் முடிவடைகிறது கதை!

புதையல் வேட்டைகளும், துப்பாக்கி சண்டைகளுமே  பிரதானமாய் காட்டப்படும் வன்மேற்கின் மற்றொரு யதார்த்த முகத்தை காட்டும் இந்தக் கதை - பிரபல பிரெஞ்சு காமிக்ஸ் கதாசிரியர் ஜான் வான் ஹாமால் எழுதப்பட்டு, ஓவியர் ரோசின்ஸ்கியின் அழகிய சித்திரங்களால் செதுக்கப்பட்டு, காமிக்ஸ் வடிவில் - Western என்ற பெயரில் 2008-ஆம் ஆண்டு ஃபிரான்சில் வெளியானது! அதன் தமிழ் மொழியாக்கம், இம்மாதம் முத்து காமிக்ஸில் Wild West ஸ்பெஷலாக மலர்ந்துள்ளது. இந்தப் படைப்பின் சித்திரங்களின் சிறப்பை உணர காமிக்ஸ் பதிவுலகில் புதிதாய் கால் பதித்திருக்கும் வாசக நண்பர் ராஜ்குமாரின் பதிவைப் படியுங்கள்! சோகத்தில் உழலும் நாயகர்களும், தோற்றுப் போகும் காதல்களும், பச்சைத் துரோகங்களும் தமிழ் சினிமா பார்த்துப் பழகியவர்களுக்கு புதிதல்ல என்றாலும் இந்தக் காமிக்ஸைப் படித்து யாராவது ஒரு இயக்குனர் இன்ஸ்பைர்(!) ஆகி, சமகால மதுரை சூழலில் இந்தக் காதல் கதையை ஒரு படமாக எடுத்தால் நன்றாகத்தான் இருக்கும் என தோன்றுகிறது!

கிராபிக் நாவல் என்றால் என்ன?!:
சமீப காலத்தில் தமிழ் காமிக்ஸ் ரசிகர்களிடையே ஒரு பெருத்த குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் கேள்வி இது! உண்மையில் அதை வரையறுப்பது சற்று கடினம்தான். மேலே சொன்னது போல கனத்த கதையம்சம் கொண்ட காமிக்ஸ்கள் சில சமயம் கிராபிக் நாவல்கள் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. ஒரே ஒரு பிரபல நாயகனை மட்டும் சுற்றி அமையும் தனித் தனி காமிக்ஸ் கதைகள் அல்லது தொடர்கள் போலன்றி 'எவனோ ஒருவனின்' கதை சொல்லும் தனிப்படைப்புகளும் கிராபிக் நாவல்கள் என்றே அழைக்கப்படுகின்றன! ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத தனித்துவமான ஒவ்வொரு காமிக்ஸ் படைப்பும் ஒரு கிராபிக் நாவல்தான் - அவற்றில் சில தெளிவான சித்திரங்களை கொண்டிருக்கும், சில கதைகளோ நேர்த்தியான ஓவியங்களுடன் தீட்டப்பட்டிருக்கும், இன்னும் சிலவோ குழந்தைகள் கிறுக்கும் படங்களை விட மோசமான சித்திர அமைப்பை கொண்டிருக்கும். சுருக்கமாக சொல்வதானால், பொதுவான எந்தவொரு வரைமுரைகளுக்குள்ளும் அடைக்க முடியாத கதைகளையும், சித்திரங்களையும் உள்ளடக்கிய ஒவ்வொரு காமிக்ஸும் ஒரு கிராபிக் நாவலே! :)

முத்து காமிக்ஸ் Wild West ஸ்பெஷலில் மேற்சொன்ன கதையை தவிர்த்து, தமிழில் வெளியான கௌபாய் ஹீரோக்களில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் திகழும் இருவரில் ஒருவரான கேப்டன் டைகர் என்ற ப்ளூபெர்ர்யின் அதிரடி சாகசமான "மரண நகரம் மிசெளரி" இடம்பெற்றிருக்கிறது. பதிவு ஏற்கனவே மரண நீளத்திற்கு போய் விட்டதால் அதனை விமர்சிக்கப் போவதில்லை. இதைப் படிக்கும் போது ஒரு டமால் டுமீல் (நன்றி ஜான் சைமன்) வெஸ்டர்ன் படம் பார்த்த திருப்தி கிடைப்பது நிச்சயம்!!! டைகரின் ரசிகர் மன்ற சிவகாசி கிளையின் சீனியர் மேனேஜர் சௌந்தரின் திருவுருவம் இந்த இதழில் வெளியாகியிருப்பது தற்செயலான ஒரு திட்டமிட்ட செயல் என்ற உண்மை சமீபத்தில் கசிந்திருக்கிறது! புத்தகத்தின் சில மாதிரிப் பக்கங்களை ஸ்கேன் செய்ய நேரமில்லாததால், சௌந்தரின் பதிவிலிருந்து சுடச் சுட ஒரு சில ஸ்கேன்கள் சுடப்பட்டுள்ளன! ;) இன்னொரு கௌபாய் சூப்பர் ஸ்டாரான டெக்ஸ் வில்லரின் 240 பக்க முழுநீள சாகசம் அடுத்த ஆண்டு வெளியாகிறது என்பது கொசுறு தகவல்.இது போன்ற புதிய முயற்சிகளை தமிழுக்கு கொண்டு வருவதில் திரு.S.விஜயனை அடித்துக்கொள்ள இப்போதைக்கு ஆள் இல்லை. மொழிப்பெயர்ப்பு சற்று ஏமாற்றத்தையே தருகிறது. கதாபாத்திரங்கள் செந்தமிழிலும், கொச்சைத் தமிழிலும் மாறி மாறிப் பேசிக் கொள்கின்றனர், சில இடங்களில் கதையின் போக்கு எளிதில் விளங்கவில்லை. ஆசிரியர் என்னதான் ஹாட்லைனில் இதற்கு விரிவான விளக்கங்கள் சொன்னாலும் ஒரு டிஜிடல் இமேஜ் ஃபைலை, போட்டோ ஷாப் போன்ற அப்ளிகேஷன்கள் மூலம் எடிட் செய்து டயலாக் பலூனை லேசாக ஊதிப் பெரிதாக்குவது அப்படி ஒன்றும் பெரிய காரியம் அல்ல - இது எளிதில் தவிர்க்கக் கூடியதொரு சிறு குறையே! மற்றபடிக்கு இது தவிர்க்கக் கூடாத ஒரு அற்புதமான காமிக்ஸ் விருந்து, இதை Ebay-இல் வாங்க இங்கே செல்லவும்!

கருத்துகள்

 1. மிக அருமையான புத்தகம் இந்த WWS இதழ். விமர்சனமாக இல்லாமல் ஒரு விக்கிப்பேஜ் போல இந்தப் பதிவு அமைந்திருக்கிறது.

  செஷீரீப், தான் துப்பாக்கியை மிக நல்லமுறையில் கையாளும் திறமை படைத்தவன் என்று அறிந்துகொள்ளக் கூடாது என்றே ஹீரோ நினைக்கிறான். இந்த அம்சம் கதையில் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.

  எனக்கு ஒரு சிறு குழப்பம். தன் இறுதிகட்டத்தில் ஷெரீப், எப்படியும் ஹீரோவுக்கு மரண தண்டனைக் கிடைத்திருக்கும் என்ற நிலையில் இந்த உண்மையை சொல்லாமல் மறைந்ததில் என்ன பெரிய துரோகம் என்பதனை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "விசயமற்றதொரு சாமான்யன் நானென்று நிலை நாட்டிட விலகி சுட்டேனா, அல்லது நிஜமாகவே சாமான்யனாக மாறி விட்டேனா" என குழப்பத்துடன் சிந்திப்பதாய்த்தான் வசனம் இருக்கிறது! :)

   நேட்தான் எட்வின் என்ற உண்மையை முதலிலேயே சொல்லிவிட்டால் அவன் மேலான கொலைப்பழி நீர்த்துப் போகும் வாய்ப்புள்ளதாக ஷெரீஃப் நினைத்திருக்கலாம்! தன்னை பாதுகாத்துக் கொள்ளவே சுட்டதாக நேட் வாதாடியிருக்கலாம் - இப்படி எல்லாம் நாமாக கதை எழுதிக் கொள்ள வேண்டும் என கதாசிரியர் நினைத்து விட்டார் போல! ;)

   நீக்கு
  2. ஏன் குழப்பம் ஏற்பட்டது என்பதனை புத்தகத்தினைத் திரும்ப படிக்கும் போது உணர்ந்தேன். நீங்கள் கூறியது தான் சரி. நான் அந்த வரிகளைப் படித்துவிட்டு அவன் வேண்டுமென்றே குறி தவறி சுட்டதாக நினைத்து, அந்த வரிகளைக் கடந்துவிட்டேன்..

   நீக்கு
 2. எனது முடிவை ஒரு மணி நேரம் தள்ளி வைத்திருக்கலாம்.ஹும். ஓகே அழகான நீண்ட பதிவு .வாழ்த்துக்கள்,எனக்கு சோக கதை எல்லாம் பிடிகாது. எனவே என் முதல் ஓட்டு tiger கு தான்.BARANIWITHCOMICS .blogspot .com .முடிந்தால் வாருங்கள் நண்பரே...

  பதிலளிநீக்கு
 3. முதல் இரண்டு பத்தியை படித்ததும் தலை சுற்றுகிறது! கவ்பாய் கதைகளில் லக்கிலூக்கை தவிர வேறு எதுவும் பிடிப்பதில்லை.

  :( :( :(

  பதிலளிநீக்கு
 4. கதையையும், கதாபாத்திரங்களையும் நன்றாக உள்வாங்கிக் கொண்டு பதிவிட்டிருக்கும் விதம் அருமை!

  என்றாலும்,

  உங்களின் கண்ணோட்டத்தில் இக்கதையை நீங்கள் எப்படியெல்லாம் ரசித்தீர்கள் என்பதையும் பதிவிட்டிருந்தால் இன்னும் அருமையாய் அமைந்திருக்கும்.

  இக்கதையின் சித்திரத் தரத்தை ரசித்து, அழகாகப் பதிவிட்டிருக்கும் நண்பர் ராஜ்குமாரின் வலைப்பூவிற்க்கு இங்கே இணைப்புக் கொடுத்து நட்பு பாராட்டியிருக்கும் விதம் அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்வது உண்மைதான். இதுவரை வேறு எந்த கதையையும் இந்த அளவு விவரித்ததில்லை! இம்முறை இப்படி செய்யக் காரணம், கிராபிக் நாவல் என்பது எப்படிப்பட்ட ஒரு கனத்த கதையம்சத்தை கொண்டிருக்கலாம் என்பதை விளக்கவே! :)

   ஆம், ராஜின் பதிவு அட்டகாசமாக உள்ளது! :)

   நீக்கு
 5. வழக்கம் போல் அருமையான பதிவு.

  //எச்சரிக்கை: இந்தப் பதிவில் முழுக்கதையும் சொல்லப்பட்டிருக்கிறது.// இன்னமும் மறக்கலையா?:-)

  //தற்செயலான ஒரு திட்டமிட்ட செயல் என்ற உண்மை சமீபத்தில் கசிந்திருக்கிறது!// வந்ததிகளைப் பரப்பாதீர் :-) ஏன் இந்த கொலை வெறி :-)

  //வன்மேற்கின் வஞ்ச நெஞ்சங்கள்// தலைப்பைப் பார்த்தவுடன் ஷங்கர் அண்ணாவின் வலைப்பூவிற்கு வந்துவிட்டோமோ என்று தவறாக நினைத்து விட்டேன். :-) அருமையான வர்ணனை.

  //சௌந்தரின் பதிவிலிருந்து சுடச் சுட ஒரு சில ஸ்கேன்கள் சுடப்பட்டுள்ளன! ;)// தண்டனையாக எனது வரும் பதிவுகளில் குறைந்தது 100 பின்னூட்டங்களாவது இட வேண்டும் ஓகேவா :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இன்னமும் மறக்கலையா//
   இது அவருக்காக அல்ல! :) பொதுவாகவே கதை சொல்லும் முன்னர் எச்சரிப்பது (Spoiler Alert) ஒரு நல்ல பண்பு! ;)

   //ஏன் இந்த கொலை வெறி :-)//
   எங்க போட்டோ வர்ற வரைக்கும் இப்படித்தான்! :D

   //ஷங்கர் அண்ணாவின் வலைப்பூவிற்கு வந்துவிட்டோமோ//
   இதை பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன். :) மற்றபடிக்கு அவரின் தமிழ் எனக்கு எட்டாத தொலைவில்! :)

   //100 பின்னூட்டங்களாவது//
   திண்டுக்கல் சரவணனிடம் சொல்லி ஏற்பாடு செய்கிறேன்! ;)

   நீக்கு
 6. ஆட்டகாசமான தலைப்பு ......துப்பாக்கியுடன் எச்சரிக்கையா ? சுட்டு விடாதீர்கள் நண்பரே..............கண்கள் பேசியதால் வார்த்தைகள் தேவை இல்லை என்று நினைத்திருக்கலாம்...........தங்களது அற்புதமான பதிவிற்கு நன்றிகள்..............

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கண்கள் பேசியதால் வார்த்தைகள் தேவை இல்லை என்று நினைத்திருக்கலாம்//
   கேத்தியை சொல்கிறீர்களா? உண்மை!!!

   நீக்கு
 7. // ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத தனித்துவமான ஒவ்வொரு காமிக்ஸ் படைப்பும் ஒரு கிராபிக் நாவல்தான் - அவற்றில் சில தெளிவான சித்திரங்களை கொண்டிருக்கும், சில கதைகளோ நேர்த்தியான ஓவியங்களுடன் தீட்டப்பட்டிருக்கும், இன்னும் சிலவோ குழந்தைகள் கிறுக்கும் படங்களை விட மோசமான சித்திர அமைப்பை கொண்டிருக்கும். சுருக்கமாக சொல்வதானால், பொதுவான எந்தவொரு வரைமுரைகளுக்குள்ளும் அடைக்க முடியாத கதைகளையும், சித்திரங்களையும் உள்ளடக்கிய ஒவ்வொரு காமிக்ஸும் ஒரு கிராபிக் நாவலே! :) //

  ஹ்ம்ம்ம் நம்ம சாலமன் பாப்பையாவின் தீர்ப்பு போல தெளிவாக சொல்லி விட்டீர்கள்
  நீங்களே சொன்னதுக்கப்புறம் அப்பீல் ஏது நண்பரே ;-)
  .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தீர்ப்பு உதவி: விக்கிக்கும், வெப்புக்கும் நன்றி! ;)

   நீக்கு
 8. ஆஹா! ஆஹா! ஆஹா! கலக்குங்க நண்பா!

  பதிலளிநீக்கு
 9. உங்களுக்கே உரிய பாணியில் கூறி உள்ளீர்கள் நண்பரே.
  உங்களுடைய தனித்துவம் என்ன தான் நாங்கள் படித்திருந்தாலும் உங்களுடைய பதிவை படித்துவிட்டு
  அக்கதையை படிக்கும் பொது இன்னும் ஒரு வித்தியாசமான அனுபவமாக உள்ளது.
  நன்றி கார்த்திக்.

  பதிலளிநீக்கு
 10. பதிவு கொஞ்சம் நீளம் தான்... ஆனாலும் தங்களின் அலுக்காத எழுத்து நடை காரணமாக பதிவை ஒரே மூச்சில் படித்து முடித்தேன்!

  ராஜ்குமார் தளத்தையும் பார்த்தேன்! முதல் பதிவு என்பதே தெரியாமல் செமையாய் எழுதியிருக்கிறார்! வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போன பதிவுல கும்மி அடிச்சதுக்கு பரிகாரமா இப்படி ஒரு சீரியஸ் பின்னூட்டமா?! ;)

   நீக்கு
 11. அருமையான விமர்சனம். கதைக்குள் முழ்கி முத்தெடுத்துள்ளீர்கள்.
  உங்களை போன்ற நல்ல ரசிப்புத்திறன் கொண்ட நபர்கள் நமது
  காமிக்ஸ் ரசிகராக இருப்பதாலே நமக்கு நல்ல புத்தகங்கள் தற்சமயம்
  கிடைத்து வருகின்றன!!KEEP IT UP!!!

  உங்கள் அனுமதியுடன் இந்த பதிவில் ஒரு சிறு திருத்தம்.
  முதன் முதலில் வெஸ்டெர்ன் என்ற பெயரில் CINIBOOKSஆல் ஆங்கிலத்திலும் ப்ரென்சிலும் இந்த புத்தகம் வெளியிடப்பட்ட ஆண்டு மே 2001... 2008 அல்ல!!!
  http://en.wikipedia.org/wiki/Western_%28comics%29

  நமது கேப்டன் டைகரை பற்றி கண்டுகொள்ளாம் விட்டுவிட்டிரே??
  இதை படித்துவிட்டு

  http://tamilcomicsjunction.forumotion.in/t2-wild-west-early-bird

  இன்னெரு முறை சென்று படித்து பாருங்கள். The story has got lots of potential!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆனால் அவர்கள் அதிகார பூர்வ தளத்தில் 2008 என உள்ளதே?! எது சரியென தேடிப்பார்த்து பிறகு தேவைப்பட்டால் மாற்றிவிடுகிறேன் - தகவலுக்கு நன்றி நண்பரே.... :)
   http://www.lelombard.be/albums-fiche-bd/western/western,675.html

   இந்தப் பதிவே பல மணி நேரங்களை விழுங்கி விட்டது! மேலும் நேரத்தை வீணடிக்க விரும்பாததே டைகரின் கதையை விமர்சனம் செய்யாததிற்கு காரணம்! :)

   //http://tamilcomicsjunction.forumotion.in/t2-wild-west-early-bird//
   இணைப்புக்கு நன்றி, இதை நீங்கள்தான் நடத்துகிறீர்களா?! நல்ல பல தகவல்கள் (பதிவுகள்) அந்த ஃபோரத்தில் உள்ளன! ஆனால், அவற்றை ஒரு வலைப்பூ (Blog) மூலம் பகிர்ந்தால் பலபேர் படிக்கவும், தொடரவும் வசதியாக இருக்கும் என்பது என் எண்ணம்!

   நீக்கு
 12. இப்போதுதான் எங்கள் ஊரில் புத்தகம் வந்ததனால் இப்போதுதான் விமர்சனம் வாசித்தேன். கதையை முதலே தெரிந்துவிடும் என்ற பயமாக்கும். ;)

  hollywood.mayuonline.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்பாடா! ஒரு வேளையாக வந்து சேர்ந்ததா?! :) :) :)

   விமர்சனத்தை படித்து, படித்த கதை மறக்காமல் இருந்தால் சரிதான்! :)

   நீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia