அவெஞ்சர்ஸ் - 2012 - பஞ்சரான பாசஞ்சர்!

பப்பரப்பா என ஒரு படத்தை பார்க்கப்   போவதற்கும், எதிர்பார்ப்பை எகிற வைத்துக்கொண்டு போவதற்கும் ஒரே ஒரு தொடர்புதான் இருக்கிறது! நாம் நினைத்ததற்கு மாறாக அந்த படம் இருக்கும் என்பதுதான் அது! எதிர்பார்ப்பு எகிறியதுக்கு காரணம் கருந்தேளின் Avengers பட விமர்சனம் மற்றும் அந்த ஆறு ஹீரோக்களை பற்றிய அவரின் அறிமுகக் கட்டுரைகள்! முன்பே ஒருமுறை  கூறியதைப் போல, நான் தமிழில் மொழி பெயர்ப்பானவற்றை தவிர்த்து மற்ற மொழி காமிக்ஸ்களை அவ்வளவாக படிக்காதவன்! எனவே Ironman, Hulk போன்ற நாயகர்கள் எனக்கு அறிமுகமானது அவர்கள் தோன்றிய ஹாலிவுட் படங்கள் மூலமாகத்தான்! அவர்கள் தோன்றிய ஒரு காமிக்ஸையும் இதுவரை படித்ததில்லை! பொதுவாகவே அமெரிக்க சூப்பர் ஹீரோ காமிக்ஸ்கள் பயங்கர ப்ளேடு என்பது எனது இப்போதைய கருத்து (விதிவிலக்குகள் உண்டு)! அயர்ன்மேன் , ஹல்க், கேப்டன் அமெரிக்கா போன்ற ஆகிய மூன்று படங்களும் எனக்கு ஓகே ரீதியில் பட்டன! தோர் இது வரை பார்க்கவில்லை!

Avengers படத்தின் ஒரு வரிக்கதை, உலக சினிமாக்களால் பல தடவை சுடப்பட்ட பெருமைக்குரிய, அகிரா குரோசாவா (பலத்த கரகோஷம்!) அவர்களின் "செவென் சாமுராய்" படத்திலிருந்து சுடப்பட்டதேயாகும்! மக்களை அடிமைப்படுத்த எண்ணும் ஒரு அதிகார வெறி பிடித்தவனை அழிக்க ஏழு பேர் கூட்டு சேர்கிறார்கள்! அகிராவின் படைப்பில் ஒரு சிறிய கிராமம், இதிலோ பூமியையே குக்கிராமமாக எண்ணும் ஒரு வேற்றுக்கிரக மனிதன்! அதில் சாமுராய்கள், இதில் சூப்பர் ஹீரோக்கள்! இந்த மிகப் பெரிய(!) ஆறு வித்தியாசங்களை தவிர்த்து ஏழாவதாக வேறெதுவும் இல்லை! இதோடு சுப்பிரமணி அதாவது சூப்பர்மேன்  கதைகளில் வரும் கிரிப்டோனைட் (Kryptonite) என்ற ஒரு சமாச்சாரத்தை கொஞ்சம் மெருகேற்றி அதுதான் உலகுக்கே ஊட்டசத்து அளிக்கும் ஒரு அற்புத, அதிசய  டப்பா - அதன் பெயர் டெஸராக்ட் (Tesseract) என்று ஒரு பிட்டை போட்டு விட்டால்......? அப்புறம் என்ன, சூப்பர் ஹீரோக்களும், டூப்பர் வில்லனும் அதை அடைய / தக்க வைக்க / மீட்கப் போராடுவார்கள் என ப்ளேஸ்கூல் போகும் பாப்பாவும் சொல்லி விடும் (எவ்ளோ நாள்தான் LKG குழந்தைன்னு சொல்லறது!). இதான் சார் கதை, இதுக்கு மேல கேட்டா கிளைமாக்ஸ்ல ஹல்க்கை வச்சு உதைப்பாங்க போல! ;) சூப்பர் ஹீரோ படங்களில் லாஜிக் பார்ப்பது தவறுதான், ஆனால் நிறைய இடங்களில் மேஜிக் கூட மிஸ்ஸிங்! :(

கண்ணெதிரிலேயே வில்லனிடம் கோட்டை விட்ட அந்த அற்புத டப்பாவை மீட்பதற்காக நிக் ஃப்யூரி, ஷீல்ட் (SHEILD) என்ற ஒரு அமைப்பை உருவாக்குகிறார்! அதை கட்டுக்கோப்பாய் மேய்ப்பதற்கே  மனிதருக்கு முழி பிதுங்கி விடுகிறது, இடைவேளையும் வந்து விடுகிறது! சும்மா சொல்லக்கூடாது, நிக்காய் நடித்த சாமுவேல் ஜாக்ஸனுக்கு அட்டகாசமான மிரட்டல் பார்வை, ஒற்றை கண்ணிலேயே கோபத்தை கொட்டுகிறார்! வில்லன் மீசை வழித்துக்கொண்டு, பன்க் தலையோடு மொக்கை ஹிந்தி பட வில்லன் போல இருக்கிறார்! அர்ஜுன் படத்துக்கு தீவிரவாதியாக செட் ஆகக் கூடிய முகலட்சணம்! மிதுன் சக்ரவர்த்தியை, இந்த கெட்-அப்பில் எங்கேயோ பார்த்த ஞாபகம்! இவருடைய பாத்திரத்தை சரியாக செதுக்காததால் ஒரு காமெடி பீஸ் போல அவ்வப்போது வருகிறார், சப்பையாக சிரிக்கிறார் (வில்லனின் விஷம சிரிப்பாம்!), அடி வாங்குகிறார், போகிறார்! அதிலும் அஸ்கார்ட் கிரக பாரம்பரிய(!) உடையில் அவர் வலம் வரும் போது எருமை மாதிரி இருக்கிறார்!

அயர்ன்மேன், ஹல்க் தவிர்த்த மற்ற நான்கு சூப்பர் ஜீரோக்களின் நிலையும் படத்தில் கிட்டத்தட்ட இதுதான்! சுமார் முக்கால் மணிநேரம் ஓடும் 'பாசஞ்சர்' கிளைமாக்ஸ் காட்சியில் தடதடவென மழையாய் கொட்டும் வேற்றுக்கிரக கூலிப்படையை இந்த நான்கு பேரும் சமாளிக்கும் விதம் கண்டு எரிச்சல்தான் வந்தது! மிஸ்கின் பட ஹீரோ போல் ஒவ்வொருவராக டீல் பண்ணி - கேப்டன் அமெரிக்கா கேடயம் வீசுகிறார், ஹாக்-ஐ அம்பு எய்கிறார், தோர் சுத்தியால் (நம் மூளையை) தட்டுகிறார், ப்ளாக் விடோவோ (ஸ்கார்லெட் ஜோஹான்ஸன்!) மேட்ரிக்ஸ் பட பாணியில் ஸ்டைல் காட்டுகிறார்! அந்த வேற்று கிரக அம்மாஞ்சிகளுக்கு மூளை என்றொரு சமாசாரம் உடலின் எந்த பகுதியிலும் இல்லை என நினைக்கிறேன்! இவர்களிடம், அடி வாங்கவே வந்தவர்கள் போல வரிசையில் வந்து அடி வாங்குகிறார்கள்! டாப் ஆங்கிள் ஷாட்டில் மன்ஹாட்டன் நகரமே எதிரிகளால் தாக்கப்பட்டு உருக்குலைவதாய் காட்டப்படும்போது இந்த நான்கு சாக்லேட் சூப்பர் ஹீரோக்களும் நீ அந்த பஸ்ஸில் இருக்கறவங்களை காப்பாத்து, நான் இந்த பில்டிங்க கவனிக்கிறேன் என ஒரே தெருவில் நின்று கொண்டு பரபரப்பது எடு படவில்லை!

இந்த படத்தின் நிஜ சூப்பர் ஹீரோ ஹல்க்தான் என்பதற்கு அவர் அறிமுகப்படுத்தப் படும்போது தியேட்டரில் எழும்பும் காது பிளக்கும் விசில் சத்தங்களே சப்தமான சாட்சி, அதுவும் இன்னமும் அவர் ஹல்க்காக மாறாத நிலையிலேயே! இடைவேளைக்கு பிறகு அவர் ஹல்க் ஆக மாறி துவம்சம் செய்யும்போது தியேட்டர் சும்மா அதிருகிறது! அருகில் அமர்ந்திருந்த பொடிப்பையன் அதை முன் கூட்டியே கணித்து ஜோசியம் சொல்லிக்கொண்டிருந்தான்! இறுதி காட்சியில் வில்லனை, சொர்ணாக்கா சலவைக்கல் மேல் துணி துவைப்பது போல் ரெண்டு தடவை தரையில் விளாசுவது சிம்பிள் பட் செம சீன்! தியேட்டரில் ஹல்க்கை பார்க்கவே சில பல ரிபீட் ஆடீயன்ஸ் வந்திருந்தது வியப்பாக இருந்தது!

ஆனாலும், இந்தியாவில் இவர் அறிமுகப்படுத்தப்படும் காட்சி நம்மை கேவலப்படுத்துவது போல் உள்ளது! :( ஏன், இந்தியா என்றால் ஒரு கொடிய நோய் பரவிக்கொண்டுதான் இருக்க வேண்டுமா? கிழிந்த துணிகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு வீடு வேறு! இந்தியாவை காட்ட தாஜ் மகாலையும், சேரிகளையும் தவிர ஹாலிவுட்காரர்களுக்கு வேறு விஷயமே கிடைக்காதா! அதுவும் வடக்கை விட்டால், தெற்கே இவர்கள் கண்களுக்கு தெரியாதா?!

அயர்ன்மேன் பரவாயில்லை ரகம்! சூப்பர் மேனுக்கு எவ்வளவோ தேவலாம்! தமிழில் அவரது ட்ரேட்மார்க்  நக்கல் வசனங்கள் அவ்வளவாக எடுபடவில்லை! அவதார் பட ஹெலிகாப்டர்களின் ரோடார் பிளேடுகளை ஒத்த இறக்கைகள் கொண்டபறக்கும் கலத்தை அவர் சரி செய்யும் இடம் ஆக்சன் காமிக்ஸ் விறுவிறுப்பு! என்னைக்கேட்டால், இவர்கள் இருவரையும் வைத்தே இந்த படத்தை முடித்திருக்கலாம்! படத்தின் நீளமும், பார்வையாளர்களின் சலிப்பும் கணிசமாக குறைந்திருக்கும்!

ஒன்றுமே இல்லாத விஷயத்துக்கு ஹாலிவுட்காரர்கள் கொடுக்கும் பில்ட்-அப் நாம் அவசியம் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று! இருந்தாலும், தல ஹல்க்குக்காகவும், சம்மட்டி தல அயர்ன்மேனுக்காகவும் ஒரு தடவை பார்க்கலாம்! ஆனால் 4 ஸ்டார் ரேட்டிங் எல்லாம் கொஞ்சம் ஓவர்! சூப்பர் ஹீரோ காமிக்ஸ்களை வெறியாக படிக்கும் அன்பர்கள் வேண்டுமானால் 5 ஸ்டார் ரேட்டிங்தான் வேண்டும் என அடம் பிடிக்கலாம்!

தமிழிலேயே பார்த்தாக வேண்டும் என்று, வெயிட் பண்ணி பார்த்த படம் இது! இதுவரை ஆங்கில படங்களை தமிழில் பார்த்தது மிக மிக குறைவு! ஆனால், நிச்சயம் தமிழில் பார்ப்பது ஒரு வித்தியாசமான அனுபவம்தான்! பின்னணியில் உழைத்த டப்பிங் கலைஞர்களுக்கும், மொழி பெயர்ப்பாளர்களுக்கும் ஒரு மிகப்பெரிய பூங்கொத்து மற்றும் பாராட்டுகள் பல! திருப்பூர் உஷா மினியில் பார்த்தேன்! சமீபத்தில் புதுப்பித்து உள்ளார்களாம்! மல்டிப்ளெக்ஸ்களை நெருங்கும் தரம், ஆனால் ஆபரேட்டர்தான் சொதப்பி விட்டார்! அவ்வப்போது கரும்திரையும், அமைதியான ஸ்பீக்கர்களும் ரொம்பவே பொறுமையை சோதித்தன! ஹல்க்குக்கு நிகரான விசில் சத்தங்கள் பில்லா-2 ட்ரைலரில் கேட்க முடிந்தது!

அவெஞ்சர்ஸ் / *** / எதிர்பார்ப்போடு போனால் நிச்சயம் பஞ்சர் :)

பி.கு.: என் பக்கத்தில் உட்கார்ந்து தொணதொணத்துக் கொண்டிருந்த பொடிப்பையனை போல, மற்ற குழந்தைகளுக்கும் இந்த படம் நிச்சயம் பிடிக்கும்! என் நெகடிவ் விமர்சனத்தை படித்துவிட்டு, எதிர்பார்ப்பை கொஞ்சம் இறக்கிக்கொண்டு சென்றால் - படம் உங்களுக்கு லைட்டாக பிடித்துப்போகும் வாய்ப்பு இருக்கிறது! ;)

19 comments:

 1. Araicha mavai araichi irukkanka nu sollunka!

  ReplyDelete
 2. அதேதான்! :) கும்பலா சொதப்பி இருக்காங்க! பட், ஹல்க்/அயர்மேன்க்காக பார்க்கலாம்!

  ReplyDelete
 3. அடுத்த அவெஞ்சர்ஸ் ஹரித்துவார் ல எடுக்கபோறாங்களாம், அக்கயும் பிச்சை எடுப்பவர்களையும், சேரியில் வாழும் அப்பாவிகளையே காட்டபோகிறார்கள் போல! 2ஜி ஸ்பெக்ட்ரம் கேசில் மாட்டிய பணக்கார தலைகளின் வீடுகளையாவது காட்டலாம். :)

  ReplyDelete
 4. //அக்கயும் பிச்சை எடுப்பவர்களையும், சேரியில் வாழும் அப்பாவிகளையே காட்டபோகிறார்கள் போல//
  இப்படி காட்டுவதில் அவர்களின் வயித்தெரிச்சல் கொஞ்சம் குறைகிறது என நினைக்கிறேன்! :)

  ReplyDelete
 5. என் பையங்க அவேஞ்சர்ஸ் பாக்கணும்னு நச்சரிகிறாங்க, கார்த்திக்கோட இந்த விமர்சன பதிவ படிச்சதுக்கப்புறம், DVD தான் வாங்கித்தரனும்னு நினைக்கிறேன்

  ReplyDelete
 6. பசங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் (என் பக்கத்தில உட்கார்ந்து இருந்த பொடிப்பையனை போல) - நிச்சயமாக அழைத்துச் செல்லுங்கள்! :)

  ReplyDelete
 7. அதுவும் என் நெகடிவ் விமர்சனத்தை படிச்சு, எதிர்பார்ப்பை இறக்கிட்டு போனீங்கன்னா உங்களுக்கும் படம் லைட்டா பிடிக்கும் ;)

  ReplyDelete
 8. வித்தியாசமான விமர்சனம்..
  வெள்ளைக்காரனுக்கு இன்னும் உலக அழிவு பயம் தீரவில்லை என்பதை இந்த படத்தின் மெகா வெற்றி அடித்த சொல்கிறது

  ReplyDelete
 9. //வெள்ளைக்காரனுக்கு இன்னும் உலக அழிவு பயம் தீரவில்லை//
  அப்படி ஒண்ணு நடந்தா அதுல அமெரிக்காவோட பங்கு நிச்சயம் இருக்கும் ;) இப்பவே பல நாடுகளில் ட்ரைலர் ஓடுதே ;)

  ReplyDelete
 10. "சிக்ஸ் டிக்ரீஸ் ஆப் செபரஷன்" என்று ஒரு விதி உண்டு. உலகில், ஏன் அண்டத்தில் உள்ள அத்தனையையும் ஆறு கட்டங்களில் ஒன்று படுத்திவிடலாம். அப்படித்தான் இருக்கிறது, உங்கள் செவன் சமுராய் உதாரணம். தமிழில் சொல்ல வேண்டுமென்றால் 'மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல'.

  ReplyDelete
 11. எனக்கு Avengers படத்தின் "ஒரு வரிக்கதை", "செவென் சாமுராய்" படத்திலிருந்து சுடப்பட்டது என்று இப்பவும் தோன்றுகிறது! ஆங்கிலத்தில் டீசண்டாக சொல்லவேண்டுமானால் "Inspiration"! ;) ஏன் அப்படி தோன்றுகிறது என்பதற்கான காரணங்களையும் கூறிவிட்டேன்! இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே! மாற்றுக் கருத்துக்கள் நிச்சயம் இருக்கும் நண்பரே!

  பி.கு.: உங்க ப்ரோபைல் போட்டோ சூப்பர்! :)

  ReplyDelete
 12. நண்பரே,

  நல்ல பதிவு ...

  முதல் பக்கத்தில் இணைத்து உள்ளேன்
  பார்க்க

  தமிழ் DailyLib

  அவசியம் Vote button ஐ இணைத்து கொள்ளுங்கள்

  To get the Vote Button
  தமிழ் DailyLib Vote Button


  Thanks,
  Krishy

  ReplyDelete
 13. மிக்க நன்றி! ஆனால், அது நானே உங்கள் தளத்தில் பதிவு செய்து இணைத்து! ;)

  //அவசியம் Vote button ஐ இணைத்து கொள்ளுங்கள் //
  அதிக Voting Widgets இணைத்தால் எனது வலைப்பூவின் loading time அதிகமாகி விடுகிறது என்பதால் இதை தவிர்க்கிறேன், நன்றி!

  ஏற்கனவே ரொம்ப slowwwwwww :)

  ReplyDelete
 14. //மற்ற குழந்தைகளுக்கும் இந்த படம் நிச்சயம் பிடிக்கும்!//

  அப்ப எனக்கு பிடிக்கும்னு சொல்லுங்க. :) :) :)

  பதிவை படிக்கலை. படம் பார்த்த பிறகு படிக்கிறேன்.

  ReplyDelete
 15. @ Abdul:

  //பதிவை படிக்கலை. படம் பார்த்த பிறகு படிக்கிறேன்.//
  அது இன்னும் பெட்டர் :) ஆனா பப்பரப்பான்னு போங்க! ;) தயவு செஞ்சு positive review படிச்சுட்டு மட்டும் போய்டாதீங்க!

  //அப்ப எனக்கு பிடிக்கும்னு சொல்லுங்க. :) :) :)//
  நீங்க குழந்தைன்னா நான் குட்டி பாப்பா :D

  ReplyDelete
 16. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  நன்றி

  வலையகம்

  ReplyDelete
 17. Enakku largo vanthu vittathu!
  Unkalukkum intha varame vanthu vidum!

  ReplyDelete
 18. படத்துல ஒரு டாக்டரா வர்றவருதான் ஹல்க்ன்னு தெரியாம போய் பார்த்த படம் இது. எல்லாரும் அந்த டாக்டர காட்டும் போது ஏன் கைதட்டினாங்கன்னு புரியாம உட்கார்ந்திருந்தேன். வாழ்க்கையில் ஒரு படத்திற்கு போய் தூங்கியது (முதல் பாதி) இது ஒன்று தான். இதுல சத்யம் தியேட்டர் 3டி வேற...

  ReplyDelete

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia