ஆன்லைன் ஷாப்பிங் - 1 - அறியாத முகம்!

பதில்: இணையம் மூலம் வாங்குவதோ, விற்பதோ இன்றைய தேதியில் ஒரு ஆச்சரியகரமான விஷயமே அல்ல! பெரும்பாலானோர் குறைந்த பட்சம் ஒரு இரயில் டிக்கெட்டாவது இணையம் மூலம் தாமாகவோ அல்லது தெரிந்தவர்கள் / ஏஜன்ட் மூலமாகவோ வாங்கியிருப்பார்கள்! இரயில் நிலையத்தில் கால் கடுக்க நின்று கவுன்டரில் வாங்கும் டிக்கெட்டும் ஒரு வகையில் ஆன்லைன் ஷாப்பிங்தான் (முறைக்காதீர்கள்)! இவ்வாறாக ஏதோ ஒரு வகையில் ஒவ்வொருவருக்கும் ஆன்லைன் ஷாப்பிங் பற்றிய அறிமுகம் இருக்கிறது! ஆனால் அந்த அறிதலின் ஆழம் ஒவ்வொருவரிடமும் மாறுபட்டிருக்கிறது! மேலோட்டமாக பார்த்தால் எளிதானதாக தெரிந்திடும் இணைய வணிக பெருங்கடலில், விழிப்புணர்வு மிக்கதொரு தேர்ந்த நுகர்வாளராக திகழ பல நெளிவு சுளிவுகள் தெரிந்திட வேண்டியது அவசியம்! இத்தொடரில், ஆன்லைன் ஷாப்பிங் பற்றிய பல்வேறு அம்சங்களை விரிவாக காண்போம்!

+2 தமிழ் முதல் தாள் - நெடு வினா - 8 மதிப்பெண்கள்:-
கேள்வி: இணைய வணிகம் பற்றிய ஒரு கட்டுரை வரைக!

என்னடா, தமிழ் எக்ஸாமுக்கு(!) பதில் எழுதுவது போல பதிவை, அம்சம் - துவம்சம் என்று டெர்ரராக ஆரம்பித்திருக்கிறான் என பேஜாராகி அப்பீட் ஆகி விடாதீர்கள்! :) முடிந்தவரை ஒரு கட்டுரை ஃபீல் வராமல் பார்த்துக் கொள்கிறேன் :D அதே சமயம், நீங்கள் ஒரு ஆன்லைன் ஷாப்பிங் - "ஆண் லயன்" அல்லது "பெண் சிங்கம்" ஆக இருந்திடும் பட்சத்தில் பதிவில் காணும் சில எளிமையான விஷயங்களை பார்த்து கோபத்தில் உறும வேண்டாம்! மாறாக உங்கள் மேலான கருத்துக்களையும், யோசனைகளையும் தெரிவியுங்கள்! :) ஆன்லைன் எலி முதல் புலி வரை அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்பதே இந்தப் பதிவின் நோக்கம்!

இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பத்து சதவிகித பேர் இணைய பயனாளர்களாக உள்ளனர் - தோராயமாக பார்த்தால் பனிரெண்டு கோடி பேர்! அமெரிக்க மக்கள் தொகையில் இது மூன்றில் ஒரு பங்கு!! அவ்வளவு ஏன் ஜப்பானின் மொத்த மக்கள் தொகையே இவ்வளவுதான்!!! சரி காலரை இறக்கி விட்டுக் கொள்ளுங்கள் :) ஏன் என்று கேட்கிறீர்களா? நமது இணைய வணிகத்தின் மொத்த மதிப்பை அவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் கணக்கு தலைகீழாக மாறிவிடும்! இருந்தாலும் உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் இணைய வணிக சந்தைகளில், நிச்சயம் இந்தியாவிற்கு முதல் வரிசையில் இடம் உண்டு!

பத்து ஆண்டுகளுக்கு முன்பு விரல் விட்டு எண்ணக்கூடிய அளவே இருந்த இணைய வணிகத் தளங்கள் தற்போது பல நூறு தடவைகள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவு வளர்ந்து நிற்கின்றன! தினம் தினம் ஒரு ஷாப்பிங் தளம் புதியதாய் முளைத்துக் கொண்டிருக்கிறது! இரயில் / ஃபிளைட் டிக்கெட் புக்கிங் என்று மற்றும் நின்றிடாமல் ஒரு ஃப்ளைட்டையே புக் செய்து வாங்கிடவும் இன்று இணையத்தளங்கள் இருக்கின்றன! - உதாரணம் சொல்லறேன்னு இப்படியா உதார் விடறது? கொஞ்சம் ஓவரா தெரியல? :) சரி கொஞ்சம் சிம்பிளாக - காலணிகள், ஆடைகள், கண்ணாடிகள், கம்ப்யூட்டர் பாகங்கள், சுற்றுலா பயணங்கள், பூக்கள், மளிகை சாமான்கள், மொபைல்கள், புத்தகங்கள், ஃபர்னிச்சர்கள் - இப்படி முடிவில்லாததொரு பட்டியல் இது!

ஆனால், இச்சேவைகளை வழங்கும் அனைத்து தளங்களும் நம்பத்தகுந்தவைதானா? அவ்வாறு வாங்கிடும் அனைத்து சேவைகளும், பொருட்களும் சிறந்தவைதானா? இணையத்தில் கிடைக்கும் கவர்ச்சிகர சலுகைகள் நிஜம்தானா? இணையம் மூலம் பண பரிமாற்றம் செய்வது பாதுகாப்பானதுதானா? இதனை 'தானாக்களுக்கும்' டானென்று ஒரே பதில்தான்! இல்லை! இவற்றில் பல டுபாக்கூர் கம்பெனிகளும் உள்ளன, பல "ரொம்ப நல்லவன்டா" வகை கம்பெனிகளும் உள்ளன.பணம் வாங்கி விட்டு செங்கல்லை பார்சல் செய்து அனுப்பும் மோசடித் தளங்களும் உள்ளன, அழகிய ஃகிப்ட் ராப்பரில் அலுங்காமல் பொருட்களை அனுப்பும் தளங்களும் உள்ளன! விழிப்பாக இருப்பது உங்களின் பொறுப்பே!

என்னடா இது இவ்வளவு ரிஸ்க் எடுத்து ரஸ்க் சாப்பிடணுமா என்று கேட்பதற்கு முன் கீழ் கண்ட சில நன்மைகளை ஒரு தரம் மனதில் இருத்துங்கள்!

 • உட்கார்ந்த இடத்தில் இருந்தே உள்ளூரில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பொருட்களை தருவிக்கலாம்! எந்நேரமும் ஷாப்பிங் செய்திடலாம்!
 • கடைகளில் நேரில் சென்று வாங்குவதை விட பல சமயம் அதே பொருள், அதே தரத்துடன், கிட்டத்தட்ட 10% முதல் 50% வரை குறைவான விலையில் இணையத்தில் கிடைத்திடும்
 • போனஸாக, பெட்ரோல் செலவும் நேரமும் மிச்சம்
 • பத்து கடை ஏறி இறங்கி எங்கே விலை குறைவாக இருக்கிறது என மணிக்கணக்கில் நேரம் விரயமாக்கி செய்திடும் ஆராய்ச்சியை பத்தே நிமிடத்தில் தேடுபொறிகள் மூலம் அறிந்திடலாம்
 • பொருட்களை வாங்கும் முன் அதை பற்றிய மற்றவர்களின் கருத்தினை இணையம் மூலம் அறிந்திடலாம்! வாங்கிய பொருட்களுக்கு நீங்களும் கருத்திட்டு பிறர்க்கு உதவலாம்
 • கடைகளில் அனைத்து வகை பொருட்களையும் இருப்பில் வைத்திருக்க மாட்டார்கள், இணையத்தில் அப்படி இல்லை. ஒன்றுக்கு பத்து சாய்ஸ்கள் சுலபமாக கிடைத்திடும்
 • கடைகளில் விற்பனைக்கு வந்திடாத அல்லது வர தாமதமாகிடும் பொருட்களும் இணையத்தில் உடனே கிடைத்திடும்
 • விரும்பிய பொருளை வாங்கி பிறர்க்கு பரிசாக அனுப்பிடலாம்
 • பழைய பொருட்களை விற்கலாம், வாங்கலாம்
 • கிரெடிட் / டெபிட் கார்டு மூலமாக பண பரிமாற்றம் செய்திடும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பேங்குகள் ரிவார்ட் பாய்ண்ட்ஸ் வழங்கிடும் - இவற்றை பணமாகவோ, பரிசாகவோ பெற்றிடலாம்!
 • சில இணைய வணிக தளங்கள், COD - Cash On Delivery - அதாவது "கையில காசு, வாயில தோசை" முறையில் பொருட்களை அனுப்புகின்றன! இதற்கு நீங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பண பரிமாற்றம் செய்திட வேண்டிய அவசியம் இல்லை!
 • சில தளங்கள் பொருட்கள் பிடிக்காவிடில் திரும்பபெறும் வசதியையும் அளிக்கின்றன!
 • முக்கியமாக நேரில் சென்று வாங்க கூச்சப்படும் 'சமாசாரங்களை' நெளியாமல் வாங்கலாம்! :)
என்ன நண்பர்களே, ஆன்லைன் ஷாப்பிங் செய்ய கைகள் பரபரக்கின்றனவா? பர்ஸும், கையுமாக பதிவின் அடுத்த பகுதியில் சந்திப்போம்! :)

கருத்துகள்

 1. தரமான பதிவு, அடுத்த பாகத்திர்க்காக வெய்ட்டிங்

  பதிலளிநீக்கு
 2. டொமைன் வாங்குவதும் ஆன்லைன் ஷாப்பிங் தானே? #டவுட்டு நம்பர் ஒன்னு

  விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் இந்த தளங்களில் ஷாப்பின் செய்வதை விண்டோஸ் ஷாப்பிங் என்று சொல்லலாமா? #டவுட்டு நம்பர் ரெண்டு

  Apart from the joke, அவசியமான தொடர். தொடர்ந்து எழுதுங்கள் நண்பா!

  பதிலளிநீக்கு
 3. // இவற்றில் பல டுபாக்கூர் கம்பெனிகளும் உள்ளன //

  எங்கே இவற்றை ஒன்று இரண்டு மூன்று என வரிசைபடுத்தி கூறுங்கள் ;-)
  .

  பதிலளிநீக்கு
 4. ஆன்லைன் ஷாப்பிங் பற்றிய ஏ2இஜட் தொடர், எளிமையாய்...
  தொடரட்டும்...

  பதிலளிநீக்கு
 5. நல்ல பகிர்வு.....

  ஆன்லைன் பற்றி நிறைய விஷயங்கள்...

  நன்றி பாஸ்

  பதிலளிநீக்கு
 6. எனக்கும் இதற்கும் ராசி இல்லை. 99 % தோல்விதான் . சரி வெளிநாட்டு பொருட்களை வாங்க நம்பத்தகுந்த வழி என்ன ?. நமது நாட்டிற்கு அவை வரும்பொழுது சோதனை மற்றும் வரி பிரச்சனைகள் உண்டா ?

  பதிலளிநீக்கு
 7. @ வரலாற்று சுவடுகள்: சீக்கிரமே நண்பா!

  @ Msakrates: :) தொடர்ந்து படியுங்கள்!

  @ Abdul Basith: :) :) :) ஆமாமா! அதே போல பாதுகாப்பா ஷாப்பிங் பண்ணனும்னா "Windows Safe Mode"-ல boot பண்ணி ஷாப் பண்ணனும்! :D

  பதிலளிநீக்கு
 8. @ Cibiசிபி: நீங்க விளையாட்டுக்கு கேக்கறீங்களா, இல்ல டுபாக்கூர் கம்பெனிகளே இல்லன்னு சொல்லறீங்களான்னு தெரியல! இந்த கட்டுரையோட நோக்கம் டுபாக்கூர் கம்பெனிகள வரிசைப்படுதறது இல்ல! இருந்தாலும் நீங்க கேட்டதற்காக ஒண்ணு ரெண்டு உதாரணம்! செங்கல் அனுப்புனா மட்டும்தான் அப்படிப்பட்ட கம்பெனின்னு அர்த்தம் இல்ல! டைம்ஸ் ஃஆப் இண்டியா பேப்பர்-ல ரீடர்ஸ் ஆஃபர் பார்த்திருக்கிறீங்களா? பழைய, outdated போனை ஆறு, ஏழாயிரத்துக்கு விப்பாங்க (shopping.inidiatimes.com மூலமா!) - இது மோசடி இல்லையா? அதே போல timtara அப்படின்னு கூகிள் பண்ணிப் பாருங்க! அது மட்டுமில்ல காசை வாங்கிட்டு வாரக் கணக்குல, மாதக் கணக்குல பொருட்களை அனுப்பாம இழுத்தடிக்கரவங்களும் இருக்காங்க! அப்புறமா டெலி / இன்டர்நெட் ஷாப்பிங் அப்படின்னு டிவியில காமெடி ப்ரோக்ராம் வரும் பார்த்திருக்கிறீகளா? அமேசான் காட்டு அற்புத மூலிகையால் தயாரித்த தைலம் - 100ml மூவாயிரம் ரூபான்னு விப்பாங்க! அது மோசடி இல்லையா?

  பதிலளிநீக்கு
 9. @ NIZAMUDEEN: இந்த கட்டுரையில் எழுத்து நடை கொஞ்சம் போரிங் ஆக இருக்கிறதோ என ஒரு சந்தேகம்! :(

  @ தமிழ்வாசி பிரகாஷ்: மிக்க நன்றி நண்பரே!

  @ Erode M.STALIN: கவலை படாதீங்க பாஸ்! தொடர்ந்து படியுங்க - அப்புறமா ஆன்லைன்ல ஷாப் பண்ணித் தள்ளலாம்! வெளிநாட்டுல இருந்து இறக்குமதி பண்ணறது பற்றி சீக்கிரமே ஒரு தனி பகுதி வரப் போகுது! :)

  பதிலளிநீக்கு
 10. ஆன்லைனில் நானும் புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன் ஆனால் மற்ற பொருட்கள் வாங்க பயம்
  நீங்கள் கூறியது போல நடந்தால் என்ன செய்வது?????????????

  அதற்காகத்தான் ஏமாற்றுபவர்களின் வலை தளங்களை பட்டியலிடுங்கள் என்று சொன்னேன்

  அப்படி தவறாக எண்ணவேண்டாம் :))
  .

  பதிலளிநீக்கு
 11. @Cibi: இப்படி எழுத்தில் கருத்துக்களை பரிமாறும் போது சொல்ல வருவது ஒன்றாக இருக்க, படிப்பவர் புரிந்து கொள்வது இன்னொன்றாக மாறிவிடுவதில் ஆச்சரியம் இல்லைதான்! :) நிச்சயம் நண்பரே, வரும் பகுதிகளில் பொருட்கள் வாங்க சில நம்பிக்கைக்குரிய தளங்களை பட்டியலிடுகிறேன்! :)

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia