வழக்கு எண் : 18/9 - 2012 - திராவக விளக்கு!

பெங்களூர் மல்டிப்ளெக்ஸ் மயான  அமைதியில் படம் பார்ப்பது ஒரு அனுபவம் என்றால், தமிழ்நாடு தனித் திரையரங்குகளில், சலசலப்போடு கலகலப்பாக படம் பார்ப்பது இன்னொரு அனுபவம்! தனியாக சென்றாலும் நண்பர்களோடு படம் பார்த்ததொரு திருப்தி நிச்சயம் கிடைக்கும்! இதில் இன்னொரு அம்சமும் இருக்கிறது! ஒரு படம் வெற்றிப்படமா இல்லையா என்பதை, இணையத்தில் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் படிக்காமலேயே இங்கு தெரிந்து கொள்ளலாம்! மேலும் ஒரு காட்சி உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ மெஜாரிட்டி கை தட்டலில் உங்களுக்கும் அந்த காட்சி பிடித்தது போன்ற ஒரு பிரமை ஏற்பட்டுவிடும்! இந்த பீடிகையோடு விமர்சனத்திற்கு செல்வோம்!

ஒரு விழியின் இமைகளினூடே விரியும் இப்படம், மற்றொரு ஒளியிழந்த விழியின் வழியே, வலியுடன் முடிகிறது! நீங்கள் நேராக இடைவேளைக்கு பிறகு சென்றாலும் படத்தை புரிந்து கொள்வதில் எந்த ஒரு சிரமமும் இராது! செல்போன் மற்றும் இரகசிய கேமெராக்கள் சட்ட விரோதமாக, தீய காரியங்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதை பற்றி ஏற்கனவே பல படங்கள் வந்திருந்தாலும் இந்த படம் செவிட்டில் அறைவதைப் போல் அதைச் சொல்கிறது! தவறினால் விரசமாகி விடக்கூடிய பல காட்சிகள் பொறுப்புடன் கையாளப்பட்டிருக்கின்றன! சொல்ல வந்த  மெஸேஜோடு இலவச இணைப்பாய் குழந்தைத் தொழிலாளர் முறை, கூத்து கலைஞர்கள்  நசிவு, தரமில்லாத சினிமா, ஜாதி வெறி, போலீஸ் அராஜகம், பள்ளி மாணவர்களின் வக்கிரம் என்று கிடைக்கும் இடைவெளி எல்லாம் ஒரு சீரழிவை சொல்கிறார்!

புதுமுகங்களின் அணிவகுப்பாக இருந்தாலும் அது கொஞ்சமும் உறுத்தாமல் இருப்பதே அவர்களின் உழைப்புக்கும், வெற்றிக்கும் சாட்சி! இத்தனை புதுமுகங்களிடம் இருந்து சிறப்பான நடிப்பை வெளிக்கொணர்ந்த இயக்குனர் பாலாஜி சக்திவேலை மனதார பாராட்டலாம்! கதைநாயகன் ஸ்ரீ - கனா காணும் காலங்கள் தொடரில் நடித்தவராம்! நான் அதை தொடர்ச்சியாக பார்த்தது கிடையாது - இருந்தாலும் 'அழகி' (சிறு வயது பார்த்திபனாக) மற்றும் 'சொல்ல மறந்த கதை' (சேரனின் தம்பியாக) படங்களில் நடித்த இளைஞரை ஞாபகப்படுத்தும் தோற்றம்! தவறாக ஒப்புதல் வாக்கு மூலம் அளிக்க இன்ஸ்பெக்டரால் வற்புறுத்தப்பட்டு, ஜட்ஜிடம் பேசுவது போல் ஒத்திகை பார்க்குமிடத்தில் கைதட்டல் பலமாக வாங்குகிறார்! அவர் ஃபிளாட்பார கடையில் இயல்பாக வேலை செய்வதை பார்க்கும் போது,  நடித்துக்கொண்டிருக்கிறார் என்பதே மறந்து விடுகிறது! கதைநாயகி ஊர்மிளா மஹன்தா - அஸ்ஸாமை சேர்ந்தவராம்! ஒரு ஜாடையில் இளவயது மனிஷா கொய்ராலா மாதிரி இருக்கிறார்! இறுதி காட்சியில் அசத்துகிறார்!

படத்தில் வில்லனாக வரும் பள்ளி மாணவன் தினேஷ் (மிதுன் முரளி) இயல்பாக வில்லத்தனம் பண்ணுகிறார்! ஒரு பெண்ணை மடக்க, தவறான நோக்கமுடைய ஒரு ஆண் எதையும் செய்வான் என்பதை திகிலாக சொல்லி இருக்கிறார்கள்! இந்த படம், ஒரு பய அலையை பெண்களிடம் கிளப்பப்போவது நிச்சயம்! பக்கத்துக்கு வீட்டு பள்ளி மாணவனை கூட பயத்தோடும், சந்தேகத்தோடும் பார்க்க செய்து விடும்! நான் இதை சரி என்றோ தவறென்றோ சொல்ல வரவில்லை! படத்தின் இன்னொரு கதைநாயகி ஆர்த்தி (மனிஷா யாதவ்) கொள்ளை அழகு! ஸ்கூல் விட்டு வீடு திரும்பியதும், முடியை கலைத்து, மேல் பட்டனை திறந்து விட்டு, ஸ்டைலாக கண்ணாடியில் தன்னை பார்க்குமிடத்தில் (ஒரு விளம்பரத்தில் வருவதுபோல) தியேட்டர் பற்றிக்கொள்கிறது! 'துள்ளுவதோ இளமை" ஷெரின் போல ஒரு அட்டகாசமான அறிமுகம்! ஆனால் இவர் கொஞ்சமும் யோசிக்காமல் தினேஷின் வலையில் விழுவது நம்பும் படி இல்லை! அதுவும் எப்போதும் மற்றவர்களின் மொபைலை எடுத்து நோண்டும் பழக்கமுள்ள இவர், தினேஷ் தனது மொபைல் வீடியோ காமெராவை இயக்கி, சார்ஜ் போட்டு விட்டு தனியாக விட்டுச் சென்ற பின்னர் அதை எடுத்துப் பார்க்காதது ஏன்?

படத்தின் பெரும்பாலான பகுதி, போலீஸை நல்லத்தனமாக காட்டிவிட்டு திடீரென்று பாதை மாறுவது ஜீரணிக்க முடியவில்லை! இன்ஸ்பெக்டராக நடித்திருப்பவர் வாழ்ந்திருக்கிறார்! சாவகாசமாக ஸ்டேஷன் வரையில் வந்துவிட்டு, உள்ளே நுழையும்போது வேண்டுமென்றே பரபரத்து உதார் விடும் இடம் சரவெடி! இவர் நல்லவராக காட்டப்படும் இடங்களில், இவர் செய்யும் ஒவ்வொரு அதிரடி நல்ல காரியத்திற்கும் தியேட்டரில் உற்சாக கரகோஷம் எழுவது, போலீசிடம் இருந்து மக்கள் எதை எதிர்பார்கிறார்கள் என்பதற்கான ஒரு சாட்சி! மினிஸ்டராக நடிப்பவரின் முகத்திலும், பெயரிலும் கத்திரி புகுந்து விளையாடியிருக்கிறது! அதாவது ஜாதி பெயர் தெரிந்து விடக்கூடாதாம்! நாவல்களிலும், காமிக்ஸ் கதைகளிலும், எதிரி நாடாக கற்பனையான ஒரு நாட்டின் பெயர் சித்தரிக்கப்படுவது போல இனி மேல் இயக்குனர்கள் ஏதாவது ஜாதி பிரச்சனையை காட்ட வேண்டுமென்றால் ஏதாவது அகராதியில் இல்லாத வார்த்தையாக தேர்ந்தெடுத்து விட்டால் கத்திரியிலிருந்து தப்பிக்கலாம்! :)

சின்ன பட்ஜெட் படம்தான் என்றாலும் அது வெளிப்படையாக தெரியாமல் திறமையாக மறைத்திருக்கிறார்கள்! படத்தின் கணிசமான பகுதியை வேளச்சேரி அருகில் உள்ள தோஷி அபார்ட்மென்ட்ஸில் எடுத்திருக்கிறார்கள்! எனது நெருங்கிய உறவினர் ஒருவரின் வீடு அங்கு உள்ளது, மூன்று நான்கு தடவை சென்றிருக்கிறேன் என்பதால், ஏதோ மிகவும் பழக்கப்பட்ட இடத்தில் சம்பவங்கள் நடைபெறுவது போல ஒரு எண்ணம் எழுந்ததை தவிர்க்க முடியவில்லை! அதே போல ஃபிளாட்பார காட்சிகள் படு இயல்பு, நாம் தினம் காணும் இடங்களை எளிதில் பொருத்திப் பார்க்க முடிகிறது!

படத்திலும், பட முடிவிலும் சில பல குறைகள் இருந்தாலும் அவற்றை சுட்டிக்காட்ட மனம் வரவில்லை! இது போன்ற ஒரு முக்கியமான சமுதாய பிரச்சினையை, மிகுந்த பொறுப்புணர்வுடன் எடுத்துக்காட்டிய ஒரே காரணத்திற்க்காக இப்படம் அதற்குரிய மரியாதையை நிச்சயம் பெற வேண்டும்!

வழக்கு எண் : 18/9 / **** / டெக்னாலஜியை தவறாக பயன்படுத்தும் ஒவ்வொருவரும் அவசியம் பார்க்கவேண்டிய படம்!

கருத்துகள்

  1. @Msakrates: முத்து காமிக்ஸ் லார்கோ வின்ச் இதழ் மிகவும் அருமை என எல்லா தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது!

    பதிலளிநீக்கு
  2. Unkalukkum seekkiram largo vanthu vidum enchu nampukiren!

    பதிலளிநீக்கு
  3. நாளைக்கே பார்த்துடலாம் .கண்டிப்பாக பார்க்கனும்னு தோணுது

    பதிலளிநீக்கு
  4. திரைபடங்கள் பார்பதற்கு முன்பு இருந்த உற்சாகம் இபொழுது இல்லை . காரணம் கதை அம்சம் , மட்டமான நகைச்சுவை , etc ., எந்த கதையை நம்புவது என்று தெரியவில்லை . உங்களின் விமர்சனத்தில் மதிப்பெண்கள் அல்லது நட்சத்திரம் குறி போடலாம் நல்லது . என் என்றால் என்னை போல் கதையை படிக்காமல் ( பார்க்கும் பொழுது விறு விருப்பு குறையும் என்பதால் ) பார்பவர்களுக்கு வசதியாக இருக்கும் .

    பதிலளிநீக்கு
  5. @Meeran: அவசியம் பாருங்கள்!

    @Stalin:
    //உங்களின் விமர்சனத்தில் மதிப்பெண்கள் அல்லது நட்சத்திரம் குறி போடலாம் //
    கடைசி வரியாக நட்சத்திரங்கள் மற்றும் ஒரு மொக்கை பஞ்ச் டயலாக் நிச்சயம் எனது விமர்சனத்தில் இருக்கும் ;) நீங்கள் கவனிக்கவில்லை என நினைக்கிறேன்!
    >>>வழக்கு எண் : 18/9 / **** / டெக்னாலஜியை தவறாக பயன்படுத்தும் ஒவ்வொருவரும் அவசியம் பார்க்கவேண்டிய படம்!<<<

    பதிலளிநீக்கு
  6. //கடைசி வரியாக நட்சத்திரங்கள் மற்றும் ஒரு மொக்கை பஞ்ச் டயலாக் நிச்சயம் எனது விமர்சனத்தில் இருக்கும்//
    படித்தேன் நண்பரே ஆனால் **** ஐ கவனிக்கவில்லை .... ஹி ஹி ஹி .......

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia