ஜாக்கி சான் - அதிரடி ஆசான்!

ஜாக்கி சான்... இந்த பெயர் உங்கள் நரம்புகளை முறுக்கேற வைக்கிறதா? அப்படியே உங்கள் முகத்திலும் ஒரு புன்முறுவலை தோற்றுவிக்கிறதா? மேற்கண்ட இரண்டு கேள்விகளுக்கும் நீங்கள் பலமாக தலையாட்டியிருக்கும் பட்சத்தில் நீங்களும் என்னை போன்ற ஜாக்கியின் லட்சக்கணக்கான தமிழ்நாட்டு ரசிகர்களில் ஒருவர்தான் என்பது சர்வ நிச்சயம்! எனக்கு ஜாக்கி சானின் படங்கள் அறிமுகமானது எண்பதுகளின் இறுதியில்! முதலில் பார்த்த படம் - "Armour of God". அதுவரை ஆங்கில படங்கள் என்றால் Superman, James Bond, Bloodsport போன்ற fantasy / action வகையறா படங்களையே பார்த்திருந்த எனக்கு இந்த படம் அளித்த உணர்வு மிகவும் வித்தியாசமான ஒன்று. அது ஆங்கிலத்தில் டப் செய்யப்பட சைனிஸ் மொழிப்படம்  என்று புரியவே எனக்கு சில மாதங்கள் பிடித்தது (குறிப்பாக அது ஒரு ஹாங்காங் படம் என புரிந்து தொலைக்க பல வருடங்கள் ஆனது வேறு விஷயம்!). முதன் முதலாக அதிரடி ஆக்சன் காட்சிகளில் விழுந்து விழுந்து சிரித்தது அந்த படத்தில்தான் என்று நினைக்கிறேன்! அன்று முதல் ஜாக்கி சான் எனக்கு மிகவும் பிடித்தமான கதாநாயகராகிப் போனார்! தொடர்ந்த மாதங்களில், வருடங்களில் அவருடைய வேறு சில, பல படங்களை பார்க்கப் பார்க்க நான் கிட்டத்தட்ட ஒரு ஜாக்கி வெறியனாகவே மாறியிருந்தேன்!

பொதுவாக ஆங்கில மொழிப்படம் என்றால் என்னை தனியாக அனுப்ப மாட்டார்கள். ஜாக்கியின் படங்களுக்கு மட்டும் விதிவிலக்கு - அவரின் படங்களில் "சீன்" காட்சிகள் ;) இருக்காது என்ற என் பெற்றோரின் (சற்றே தவறான) அபிப்ராயம் அதற்கு முக்கிய காரணம்! அந்த வகையில் நான் முதலில் தனியாக பார்த்த (டப்பிங்) ஆங்கிலப் படம் ஜாக்கியுடையதுதான்! ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும்போதும் தியேட்டரில் ஆண்கள் கூட்டம் அள்ளும்! அவரின் பெரும்பாலான படங்கள் "Golden Harvest" என்ற பட தயாரிப்பு / விநியோக நிறுவனத்தின் வெளியீடுகளே! படம் ஆரம்பிக்கும் போது Golden Harvest நிறுவன லோகோ முதலில் காட்டப்படும் - டம்... டம்... என்ற சத்தத்துடன் நான்கு செவ்வகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக திரையில் தோன்றி, இணைந்து ஒரு சதுரமாக மாறி பல வண்ணங்களில் ஒளிர அதன் கீழே "A GOLDEN HARVEST PRESENTATION" என்று காட்டப் படும் போதே விசில் சத்தம் காதைக் கிழிக்கும்! ஜாக்கியின் அறிமுக காட்சி பற்றி கேட்கவே வேண்டாம் - ரஜினிக்கு ஒப்பான வரவேற்பு இருந்த காலம் அது!


ஹாலிவுட் ஆக்சன் படங்களை விட ஜாக்கியின் ஹாங்காங் ஆக்சன் படங்கள் என்னை மிகவும் கவர்ந்தன! அவர் படத்தில் சண்டை காட்சிகள் கொஞ்சம் நம்பும் படியாக இருக்கும் - நிஜமாகவே அடிப்பார், அடிபடுவார், கீழே விழுவார், சுவரேறிக் குதிப்பார் - முடிந்த அளவு டூப் போடாமலேயே இவற்றையெல்லாம் செய்வார்! இந்த காரணத்தினாலேயே பல தடவை கை கால்களை ஒடித்துக்கொண்டு படுக்கையில் இருந்திருக்கிறார்! ஹீரோ என்றால் ஒரு அடியும் வாங்கக் கூடாது என்பதான cliche-வை தன் படங்களில் உடைத்தெறிந்தவர் ஜாக்கி! அதே சமயம் சண்டை காட்சிகள் ஆக்ரோசமாக இல்லாமல் ரசிக்கும் படியும், சிரிக்கும் படியும் இருந்தது எங்களைப் போன்ற சின்ன பையன்களை (அந்த காலத்துல பாஸ்!) அவர் பால் கவர போதுமானதாக இருந்தது! அவரின் படம் பார்த்து விட்டு வீடு திரும்பும்போது சைக்கிள் தன்னால் வேகமாக பறக்கும் - யாரையாவது நாலு குத்து விட்டால் நன்றாக இருக்கும் என்பது போல கை கால்கள் தினவெடுக்கும்! :) :) :) அடுத்த நாள் பள்ளியில் நண்பர்களிடம் அந்த படத்தை பார்த்தது பற்றி பீற்றிக் கொள்வது எனக்கு பிடித்தமான ஒன்று!

எனக்கு பிடித்த ஜாக்கி படங்களில் "Police Story" தொடர் படங்கள் பிரதானமானவை! தொண்ணூறுகளின் பிற்பாதியில் ஜாக்கியின் கவனம் ஹாலிவுட் பக்கம் திரும்பியிருந்தது! அதில் அவர் மிகப்பெரிய வெற்றியும் கண்டார்! அவருடைய ஹாலிவுட் படங்களில் எனக்கு மிகவும் பிடித்தமானவை "Rush Hour" மற்றும் "Shanghai Noon". அதிலும் Shanghai Noon ஒரு கௌபாய் ரக படம் என்பதால் மனதுக்கு நெருக்கமான படமாகிப் போனது!

அவருடைய படங்களில் மற்றுமொரு சிறப்பம்சம் - வணக்கம் போட்டவுடனேயே தியேட்டரில்  இருந்து யாரும் நடையை கட்டிவிட மாட்டார்கள்! திரையின் ஒரு பாதியில் படத்தில் பணியாற்றியவர்களின் பெயர்கள் ஓடிக்கொண்டிருக்க, மறு பாதியில் அந்த பட ஷூட்டிங்கின் போது நடந்த காமெடியான சம்பவங்கள் / ரீடேக் வாங்கிய காட்சிகள் காட்டப்படும்! இதை சீட்டில் இருந்து எழுந்து நின்று பார்த்து விட்டு புன்னகையுடன் மெதுவாக வாசலை நோக்கி நடந்தால்தான் ஜாக்கி படம் முழுதாய் பார்த்த திருப்தி கிடைக்கும்! அவரின் பெரும்பாலான படங்களில் வரும் கொழுகொழு மனிதரான சாமோ ஹங்கை மறக்க முடியுமா? ஜாக்கியின் பல படங்களுக்கு சண்டைக்காட்சிகளை அமைத்தவர் இவரே - தவிர சில படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார்! ஒன்றும் தெரியாத ஒரு அப்பாவி முகத்துடன் இவர் செய்யும் காமெடி குசும்புகள் ரசிக்கும்படியாக இருக்கும்!

ஜாக்கி தன்னுடைய படங்களில் சீன கலாச்சாரத்தை பற்றி மிகவும் பெருமையாக குறிப்பிடுவார் / காட்டுவார்! சீனா எனது மனதுக்கு நெருக்கமான நாடாக மாறியதில் ஜாக்கிக்கு பெரும் பங்கு உண்டு! இப்படி இருக்க எனது முதல் வெளிநாட்டு பயணம் சீனாவுக்குத்தான் என்றிருந்தால் சந்தோசத்திற்கு கேட்க வேண்டுமா? 2002-இல் வேலை நிமித்தமாக Shanghai-க்கு ஒரு வாரம் சென்றிருந்தேன்! அங்கிருந்த அலுவலக நண்பர்களிடம் ஒரு மதிய வேளையில் ஜாக்கி சான் மீதான என் அபிமானத்தை தெரியப்படுத்தினேன்! இந்தியாவில் அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது! ஆனால் ஜாக்கி சான் படங்களை நான் சைனிஸ் படங்கள் என்று குறிப்பிட்டதை அவர்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை. அவர்களை பொறுத்த வரை ஹாங்காங் மனதளவில் இன்னமும் சீனாவுடன் இணைந்திருக்கவில்லை - ஜாக்கி ஹாங்காங்கை சேர்ந்தவர், எனவே அவருடைய படங்கள் ஹாங்காங் படங்கள் - அவ்வளவே! அவர்களுக்கு பிடித்தமான ஆக்சன் ஹீரோ யார் என கேட்டபோது பட்டென்று "Jet Li" என்ற பதில் வந்தது!

சமீப வருடங்களில் ஜாக்கி நடித்த பல படங்கள் என்னை ஏமாற்றி விட்டன என்றே சொல்ல வேண்டும் ("The Karate Kid" நீங்கலாக)! அவருக்கு உடலளவில் வயதாகிப் போனதும் (தற்போது 58 வயது!)
எனது ரசனையின் அளவு சற்றே முதிர்ந்து போனதும் முக்கிய காரணங்களாக இருக்கலாம்! 2008-இல் தசாவதாரம் ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக அவர் சென்னை வந்திருந்தபோது, மல்லிகாவுடன் சேர்ந்து பப்ளிக்காக அடித்த லூட்டியும் அவர் மேலான எனது மரியாதையை கொஞ்சம் குலைத்து விட்டது! நான் இந்த பதிவை இடுவதற்கு முக்கிய காரணம் ஒரு சில நாட்களுக்கு முன் வெளியான ஒரு செய்திதான்! ஜாக்கி, ஆக்சன் படங்களில் நடிப்பதை முற்றிலும் நிறுத்தப்போகிறார் என்பதே அது! அந்த செய்தி வெளியான ஓரிரு நாட்களிலேயே ஜாக்கியிடம் இருந்து ஒரு மறுப்பும், தன்னிலை விளக்கமும் வெளிவந்துள்ளது - அதாவது அவர் ஆக்சன் படங்களில் நடிப்பதை முற்றிலும் கை விடப் போவதில்லையாம், ஆனால் உயிரை பணயம் வைக்கும் படியான ஆக்சன் காட்சிகளில் மட்டும் நடிப்பதில்லை என்று மட்டும் முடிவு செய்துள்ளாராம்!

எது எப்படியோ, எனது பள்ளி / கல்லூரி நாட்களில் அவரின் படம் பார்க்கும் போதெல்லாம் சில மணி நேரங்களுக்காவது அதி வீர உணர்வை என்னுள் விதைத்த அட்டகாசமான நடிகர் என்ற முறையில் அவரின் அந்த முடிவை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்! நாம் ரசிக்கும் படியான ஆக்சன் படங்களை மீண்டும் அளிப்பார் என நம்புவோமாக!

கருத்துகள்

  1. அப்பிடியே டிட்டோ பாஸ் ..!

    சமீபத்திய ஜாக்கி படங்களில் "The Karate Kid" அற்புதமான படம். சிறுவன் ஜிடேன் ஸ்மித்துக்கு கராத்தே நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் ஒளிந்திருக்கிறது என்று விவரிக்கும் காட்சி அற்புதமானது.

    கடைசி வினாடியில் போட்டிக்கான ரூல்ஸ் புத்தகத்தை படித்து ஜெயிக்கிரதுக்கு நீ அவன மூணு தடவ அடிக்கணும்ன்னு சொல்லுற சீன் அவருக்கே உரித்தான நகைச்சுவை குறும்பை விவரிக்கும் ..! :)

    பதிலளிநீக்கு
  2. //பொதுவாக ஆங்கில மொழிப்படம் என்றால் என்னை தனியாக அனுப்ப மாட்டார்கள். ஜாக்கியின் படங்களுக்கு மட்டும் விதிவிலக்கு //
    //யாரையாவது நாலு குத்து விட்டால் நன்றாக இருக்கும் என்பது போல கை கால்கள் தினவெடுக்கும்//
    இங்கேயும் Same Blood தான்..

    பதிலளிநீக்கு
  3. @IravukKalugu: :) நன்றி நண்பரே!

    @வரலாற்று சுவடுகள்: ரொம்ப வருடங்களுக்கு பிறகு மிகவும் ரசித்த ஜாக்கியின் படம் அது! :)

    @ராஜ்: பல same blood-கள் இருப்பது மகிழ்ச்சியை தருகிறது! :D

    @Msakrates: :) அடுத்து என்ன பண்றார்னு பார்ப்போம்!

    பதிலளிநீக்கு
  4. ப்ரூஸ்லி நடித்த "என்டர் த டிராகன் " திரைப்படம் தயாரித்த பொழுது உயரமான சுவரின் மேல் இருந்து குதிபதற்கு அவர் மறுத்து விட்டார் . அருகில் இருந்த துணை நடிகர்கள் யாரும் அவ்வளவு உயரத்தில் இருந்து குதிக்க முன் வரவில்லை . சொல்லப்போனால் ஒரு டூப் கிடைக்கவில்லை, அதே சமயத்தில் ஒருநபர் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஓடி சென்று அந்த சுவற்றில் ஏறி குதித்து சாதித்தார் .
    அவர் தான் இந்த ஜாக்கி
    அவரின் இந்த அசாத்திய துணிவை கண்டு Golden Harvest" நிறுவனம் அவரை இரண்டு ஆண்டுகளுக்கு தனது படங்களுக்கு ஒப்பந்தம் செய்தது . பின்னர் அதுவே தொடர்ந்தது
    ஆரம்ப காலத்தில் சண்டை காட்ட்சிகளுக்கு டூப் போட்டவருக்கு இந்த நிகழ்வுதான் முதல் படியாக அமைந்தது

    நான் கல்லூரியல் படித்து கொண்டிருந்த பொழுது கட் அடித்து பார்க்க நினைத்த ஒரே படம் "Armour of God". ஆனால் எனது போதாதகாலம் அன்று மதியம் கல்லூரி விடுமுறை என்று அறிவித்தால் கட் அடிகாமலே பார்க்க முடிந்தது .
    ( கட் அடிக்க வாய்ப்பில்லாத கல்லூரி வாழ்க்கையை நினைத்து இன்றும் ஏங்கி கொண்டு இருக்கிறேன் )


    உங்கள் பதிவுகள் எனது கல்லூரி காலத்தை அசைபோட வைத்துவிட்டது நண்பரே ! நன்றி

    பதிலளிநீக்கு
  5. எனக்கு ரொம்ப பிடித்தமான பதிவு.நன்றி நண்பரே !

    பதிலளிநீக்கு
  6. @Stalin: சுவையான தகவல்கள்! மாணவ பருவத்தை நினைவு கூர்வது தனி சுகம்! :)

    @Meeran: பலருக்கும் பிடித்தவர் ஜாக்கி! :)

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா24 மே, 2012 அன்று PM 8:20

    நீங்க இன்னும் "Chinese Zodiac" trailer பாக்கலையா? தலைவர் அடி பின்னிருக்காறு.

    http://www.youtube.com/watch?v=vkh32rZ-Phs

    பதிலளிநீக்கு
  8. @Anony: நல்லா இருக்கு! :) சமீபத்துல வந்த படங்கள் மாதிரி மொக்கையா இல்லேன்னா சந்தோசம்தான் :) டிசம்பர்ல வருதா?!

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா28 மே, 2012 அன்று PM 2:51

    ஆமாம். "Armor of God" படத்தின் மூன்றாம் பாகம் இது.

    மற்றவர்களுடன் சேர்ந்து சில படங்களை இயக்கியிருந்தாலும், தலைவர் 21 வருடம் கழித்து தனியாக ஒரு படத்தை இயக்குகிறார்.

    பதிலளிநீக்கு
  10. ஜாக்கியின் படங்களை ரசிக்காமல் இருந்தால் அவர் உண்மையான சினிமா ரசிகனாக இருக்க முடியாது.அவருக்கு இவ்வளவு பேரும், புகழும் ஓங்கி இருக்கும் பொழுதும், படங்களில், வாழ்க்கையிலும் அவர் காட்டி வரும் எளிமை எனக்கு ரொம்பவும் பிடித்த ஒன்று.அவரது படங்கள் என்றுமே போரடிக்காது,,மறக்கவே முடியாத பல சண்டை காட்சிகளை உலகத்துக்கு அளித்தவர்..அவரை பற்றி ரொம்பவும் அழகா எழுதி இருக்கீங்க சகோ..மிக்க நன்றி.

    Carnage (2011)- திரைப்பார்வை

    பதிலளிநீக்கு
  11. ஜெட் லி எல்லாம் ஒரு ஹீரோவே இல்லை ஜாக்கி போல வருமா

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia