காமிக்ஸ் வேட்டை - அத்தியாயம் மூன்று!

ஒன்று, இரண்டு அதற்கு அப்புறம்தானே மூன்று?!

அதியமான் கோட்டையில் இரட்டை வேட்டையர்!

முன்கதைச் சுருக்கம்: ஆமா...! இவன் நைனாக்கு மூணு வருஷம் ஒரு தபா ட்ரான்ஸ்பர் ஆச்சாம், இவனும் பொட்டி படுக்கைய கட்டிகினு, பழைய பொஸ்தக மூட்டயோட ஊர் ஊரா சுத்துனானாம்! தெய்வமே, பார்ட்டு - பார்ட்டா கொல்லுரானே...

இனி...

மாற்றலான இடம் - தர்மபுரி! சேலத்தில் இருந்து கூப்பிடு தூரம்தான் என்பது மட்டும் ஒரு ஆறுதலாய் இருந்தது. சேலத்தில் மீதமிருந்த நாட்களில், நான் பரபரப்பாய் இயங்கினேன். முடிந்த வரை காமிக்ஸ் இதழ்களை வாங்கித் தள்ளினேன்! பக்கத்து மளிகை கடையில் இரண்டு தடித்த பிரிட்டானியா பிஸ்கட் கம்பெனியின் காலி அட்டை பெட்டிகளை வாங்கி (சிறிய சைஸ் பெட்டிதான் பொறாமை வேண்டாம்!),  எனது காமிக்ஸ் சேகரிப்பை அவற்றில் சீராக அடுக்கினேன். பக்கவாட்டிலும், மேற்பகுதியிலும் செய்தித்தாள்களை கசக்கி நிரப்பினேன் - புத்தகங்கள் அசையாதிருக்க வேண்டுமென்று. பின்னர் அப்பெட்டிகளை சணல் கயிறால் கட்டி, அக்கட்டுக்களின் மேல் பிரவுன் ஷீட் ஒட்டி கிட்டத்தட்ட ஒரு மினி பேங்க் லாக்கர் போல அலங்கரித்தேன்! நல்ல வேளை, இந்த தடவை பார்சல் சர்வீசில் வீட்டு சாமான்களை அனுப்பாமல் ஒரு மினி வேனை அப்பா ஏற்பாடு செய்திருந்தார்! அதனால் அலுங்காமல் குலுங்காமல் புத்தகங்கள் தர்மபுரி புது (வாடகை) வீட்டில் வந்திறங்கின!

இலக்கியம்பட்டி - செந்தில் நகரில் எங்கள் வீடு. நாங்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் மிக அன்பாகப் பழகுவார். அவரது இரு புதல்வர்கள் அருண் மற்றும் அசோக் - சமவயதினர் என்பதால் சட்டென்று நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்! வீட்டுக்கு பின்னாலேயே இருந்த அரசு மேனிலை பள்ளியில் சேர்க்கப் பட்டேன். ஒன்பதாவது வகுப்புக்குள் நுழைந்த முதல் நாளன்றே நான் இன்றும் மனதளவில் உயிர் தோழனாய் கருதும், ஆனால் எனது தவறால் தொடர்பறுந்த ஜெகன் அறிமுகமானான்! வார்த்தைக்கு வார்த்தை நண்பா போட்டு பேசும் அவனது கபடமில்லாத நட்பு இன்னும் என்னை உறுத்திக்கொண்டுதான் இருக்கிறது! உறுத்தல் குறையும் ஒரு உன்னத நாளில் உன்னை தேடி வருவேன் நண்பா!

என் புதிய சகா ஜெகன், எனது சக வேட்டையனானான்! அவனுக்கு தர்மபுரிதான் சொந்த ஊர், இண்டு இடுக்கெல்லாம் நுழைந்து திரிந்தவன் என்பது மிகவும் வசதியாக போனது! ஊரின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு பழைய புத்தக கடைகளை அறிமுகபடுத்தி வைத்தவனும் அவனே! என்னிடம் அப்போது சைக்கிள் இல்லாத காரணத்தினால், அவனே என்னை டபிள்ஸ் உட்கார வைத்து சுற்றுவான், நன்றாக ஓட்டக் கற்றுக் கொடுத்தவனும் அவனே (நன்றி நண்பா!). ஒன்பதாவது சேர்ந்து பல மாதங்கள் கழித்துதான் நாங்கள் ஒரு சைக்கிள் வாங்கினோம்! ஒரு சனி ஞாயிறு விடாமல், காமிக்ஸ் வாங்குவதற்காக சைக்கிளில் கிளம்பி விடுவோம்! தர்மபுரி பேருந்து நிலையம் அருகேதான் பழைய புத்தக கடைகள் விரவிக்  கிடந்தன! NH7 வழியாக செல்லாமல், பின்புறம் இருப்புப் பாதையை ஒட்டிய ஒற்றையடி பாதையில் செல்வோம் (இப்போது மாறியிருக்குமோ?). பலமுறை தண்டவாளங்களில் நடந்தே கடந்திருக்கிறோம். வீட்டிலிருந்து சுமார் 2.5km  தூரம் அப்போது அவ்வளவு தொலைவாக உணர்ந்ததில்லை!

பல பிளாட்பார கடைகள் இருந்தாலும் அவற்றில் எனக்கு பிடித்தமான கடை ஒன்று இருந்தது! சிமெண்ட் மூட்டை கவர்களை ஒன்றாக இணைத்து தைத்த விரிப்பில் உட்கார்ந்து, அதன் மேலே புத்தகங்களை பரப்பி, அழுக்கான ஆனால் அன்பான கிழவர் ஒருவர் அவற்றை விற்று வந்தார்! வாரா வாரம் சென்று பரிச்சயமான காரணத்தினால் எங்களுக்காக பிரத்தியேகமாக பல காமிக்ஸுகளை விரிப்பின் அடியில் மறைத்து வைத்திருப்பார். அந்த தாத்தாவிடம்தான், என் சேகரிப்பிலியே மிகவும் அரதப்பழசான புத்தகமும் கிடைத்தது! அது முத்து வெளியீடு எண் 3. அப்புத்தகத்தை எப்போதாவது எடுத்து பார்த்திடும் போது அவரின் நினைவலைகள் தாக்கிடும்! இன்னும் தர்மபுரியில் அதே இடத்தில் இருப்பார், ஆனால் புதியதாய் கடை வைத்து முன்னேறி இருப்பார் என்று கற்பனை செய்து கொள்வேன்! அட்டையில்லா அப்புத்தகத்தின் முதல் மற்றும் கடைசி பக்கங்களின் ஸ்கேனை இப்பதிவில் அந்த அன்பு கிழவருக்கு சமர்ப்பிக்க எண்ணினேன்! இரண்டு நாள் தேடியும் அந்த புத்தகம் என் கையில் சிக்காததால் பிறிதொரு நாளில் அதை இப்பதிவில் இணைத்திடுவேன்!

ஜெகனோடு சகவேட்டையாடுவது எனக்கு பிடித்தமான காரியமாய் இருந்தாலும், அதில் சில நிறை குறைகள் இருக்கத்தான் செய்தன. சேலத்தில் இருந்த போதாவது பள்ளி செல்லும் பேருந்து கட்டணத்தை மிச்சம் பிடித்து காமிக்ஸ் வாங்கினேன். தர்மபுரி வந்ததில் அந்த வாய்ப்பும் பறிபோனது (வீட்டின் பின்புறம் செல்ல பஸ் சர்வீஸ் இருக்க வாய்ப்பில்லைதான்!). அதனால் நான் வாங்கும் காமிக்ஸை அவனும், அவன் வாங்கியதை நானும் மாற்றி படித்துக்கொள்வோம். நல்ல வேளையாக, அவ்வப்போது அம்மா கொடுத்த பாக்கெட் மணியை இதற்காகவே ஒதுக்கி வைப்பேன். இருவரும் சேர்ந்து சென்று வாங்கினால் கிடைக்கும் வேட்டையை பங்கு போட வேண்டி இருந்ததால் நாங்கள் அவ்வப்போது தனியாகவும் வேட்டையாட ஆரம்பித்தோம்!

சென்ற பதிவில், ராணி காமிக்ஸின் தரம் தாழ்ந்ததால் பல வருடங்கள் அதை வாங்காமல் புறக்கணித்ததை பற்றி குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? (அதை பற்றி விரிவாக ரபிக்கின் இந்த வலைபதிவில் படித்திடலாம்!) ஜெகன் மட்டும் அறிமுகமாகாமல் போயிருந்தால் முகமூடி மாயாவியின் அற்புதமான சில கதைளை தமிழில் படிக்காமலேயே போயிருப்பேன்! மாயாவி கதை வெளியிடும்போது மட்டும் ராணி பதிப்பகத்தாரின் மொழிபெயர்ப்பில் சற்றே தரம் கூடுவதை கண்டு வியந்திருக்கிறேன். வகுப்பறையில், PT பீரியடில் மற்ற நண்பர்களோடு சேர்ந்து ராணி காமிக்ஸின் மாயாவி இதழ்கள் படித்து உடற்பயிற்சி செய்வோம்... (பிரகாஷ் குழுமத்தின் இதழ்களை மட்டும் மற்ற நண்பர்களுடன் பகிர்வதை கவனமாய் தவிர்த்துவிடுவேன், திரும்ப கிடைக்காது என்பதுதான் காரணம்!). பல கதைகள் மொக்கையாக இருந்திட்டாலும், ராணி காமிக்ஸின் மொழிபெயர்ப்பு கண்ணீரை வரவைத்திட்டாலும், லீ பாகின் வசீகரிக்கும் ஓவியங்களுக்காவே வெறித்தனமாய் ஊரிலுள்ள பழைய புத்தக கடை ஒன்று விடாமல் சல்லடை போட்டிருக்கிறேன்! 1984-இல் பற்றிய ராணி தீ மீண்டும் ஒருமுறை பிரகாசமாய் சில வருடங்கள் எரிந்தது! 

ஜெகனது நினைவாக, அவனுக்கும் எனக்கும் (அந்த காலகட்டத்தில்!) மிகவும் பிடித்த ஒரு மாயாவி கதையின் கவர் ஸ்கேன் இதோ!

நெருப்பு கக்கும் கழுகு - ராணி காமிக்ஸ் வெளியீடு எண்: 168பி.கு. 1 : ஜென்டில்மேன் படத்தில் கவுண்டமணி உபயோகித்த "சிகரெட் லைட்டர் பிஸ்டல்", மாயாவியிடம் இருந்து சுடப்பட்டதே ஆகும்! அதை மாயாவி கையில் வைத்துக்கொண்டு காமெடி பண்ணும் அழகை மேலே காணலாம் :)

பி.கு. 2 : "அவள் தொடுத்த அம்பு!" - அட்டகாசமான வண்ணக்கலர் படத்தை காண வேண்டுமென்றால் அடுத்த பதிவை தவறாமல் படியுங்கள் ;)

இந்த பதிவில் ஓவராய் உணர்ச்சிகளை பிழிந்து, உங்களை சித்திரவதை செய்ததிற்கு மன்னிக்கவும்! அதை சரி கட்டிடும் வகையில் நான் செய்த சில காமெடி டெர்ரர்கள் அடுத்த பதிவில்!

கருத்துகள்

 1. அந்த நாள் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே!!!!
  இன்னும் கொஞ்சம் பக்கங்களை இணைத்தல் மிக நன்றாக இருக்கும் நண்பா ப்ளீஸ் மாயாவிக்காகவது கொஞ்சம் கூடுதல் ஸ்கேன் ப்ளீஸ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமாய் நண்பரே, நேரம் கிடைத்திடும் போது சில ஸ்கேன்களை இணைத்து விடுகிறேன் (விடுபட்ட முத்து மூன்றாம் இதழையும் சேர்த்துதான்!)

   நீக்கு
 2. நேரமிருப்பின் எனது காமிக்ஸ் வேட்டைகள் கொள்ளைகள் திருட்டுகள் பற்றி பதிந்து இதற்கு பழிக்கு பழி வாங்கியே தீருவேன் என்று இங்கே உறுதி கூறுகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனது காமெடி டெர்ரர்கள் அதைப் பற்றியதுதான்! ;) இப்போது பதிவுபிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது! :)

   நீக்கு
  2. ஆனாலும், வேலியே பயிரை மேய்ந்தது அநியாயம் ;)

   நீக்கு
 3. உங்களைப் போலவே நானும் பல ஊர் சுற்றியவன் என்பதால், டிரான்ஸ்பரில் இருக்கும் பிரச்சினைகள் புரிகிறது. பல காமிக்ஸ் புத்தகங்களை அந்த இடமாற்றங்களினால் இழந்தவன் என்ற முறையில், மிகவும் பிடித்திருந்தது, இந்தப் பதிவு.. ஸ்கேன்களுடன் தொடருங்கள்....

  http://pinnokki.blogspot.in/2009/09/blog-post_28.html

  பதிலளிநீக்கு
 4. ? - Who is the Phoenix of Tamil Comics?
  ! - To find out, see the side bar!

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia