காமிக்ஸ் வேட்டை - அத்தியாயம் நான்கு!

வாண்டுமாமா
வாண்டுகளுக்கோர் மாமா! - காமிக்ஸ் வேட்டை நெடுந்தொடரில், இந்த அத்தியாயம்  திரு.வாண்டுமாமா அவர்களுக்கு சமர்ப்பணம்! தமிழில், தற்போது சிறுவர் இலக்கியம் என்பது பூதக்கண்ணாடி வைத்து தேடினாலும் காணக்கிடைக்காத ஒன்று! மிஞ்சி போனால் இரயில் பயணங்களின் போது, மகாமட்டமான தாளில் அச்சிடப்பட்ட பீர்பால், தெனாலிராமன் அல்லது மொக்கை நீதிக்கதைகள் பத்து ரூபாய்க்கு கிடைத்திடலாம்! அவற்றையும் பெரிசுகள்தான் வாங்கிப் படிப்பார்கள்! அந்த காலத்திலும் நிலைமை அவ்வளவு பிரமாதமாக இருந்திடவில்லைதான்! இருப்பினும் வாண்டுமாமா, முல்லை தங்கராசன் உள்ளிட்ட வெகு சில பெயர் சொல்லும் பிள்ளைகள் இருக்கத்தான் செய்தார்கள்! 

முதலில் படியுங்கள், காமிக்ஸ் வேட்டை பாகம்: ஒன்று, இரண்டு & மூன்று!

தர்மபுரியில் இருந்த கால கட்டத்தில் (1991-93) புதிது புதியதாய் சில காமிக்ஸ் இதழ்கள் முளைத்து கொண்டு  இருந்தன! அவற்றில் முக்கியமானது பார்வதி சித்திர கதைகள்! அயல் நாட்டு படக்கதைகள் மொழி பெயர்க்கப்பட்டால் காமிக்ஸ் என்றும் உள்நாட்டு தயாரிப்புகள் சித்திர கதைகள் என்றும் அழைக்கப்படுவது விசித்திரமான ஒன்று! பார்வதியில் வெளியான சித்திர கதைகளில் பெரும்பாலானவை வாண்டுமாமா அவர்கள் சிறுவர்களுக்காக 1970-களில் படைத்த உலகத்தரம் வாய்ந்த கதை தொடர்களே / தொகுப்புகளே!


பார்வதி - இதழ் 1

ஓவியம் - ரமணி!

அறிமுக பக்கம் - 1

அறிமுக பக்கம் - 2

வாண்டுமாமாவின் கதையமைப்பில் - ராமு,  செல்லம், ரமணி, கோபன் போன்ற திறமை வாய்ந்த ஓவியர்களின் கைவண்ணத்தில் மாதா மாதம் அற்புதமான கதைகள் வெளிவர ஆரம்பித்தன! வழக்கம் போல, லயன்-முத்துவே கதியென கிடந்த எனக்கு இப்புத்தகங்கள் வெளியானது முதலில் சில மாதங்கள் வரை தெரியவில்லை! ராணி காமிக்ஸ் -  மாயாவியை எனக்கு அறிமுகப்படுத்தியது போல, இதை அறிமுகப் படுத்தியதற்கும் எனது உயிர் நண்பன் ஜெகனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்! இருந்தாலும் வாண்டுமாமா எனக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருந்தார், பூந்தளிர் புண்ணியத்தில்!

அம்புலிமாமா, பாலமித்ரா போன்ற இதழ்களில் வெளிவந்த பல சரித்திர, மாயாஜால கதைகள் எனக்கு அவ்வளவாக பிடித்ததில்லை - அவைகளுக்கான விளக்க சித்திரங்களிலும் ஒரு தமிழ்த்தன்மை இருக்காது! (பெரும்பாலானவை ஆந்திர தேசத்து படைப்புகள் என நினைக்கிறேன்). அவ்வகையில் பூந்தளிர் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று - அதற்கு முக்கியதொரு காரணம், திரு. வாண்டுமாமா / செல்லம் கூட்டணியில், நமது ரசனைக்கு ஒத்துப்போகும் கதைகள் வெளியானதுதான்! எனவே, பார்வதி சித்திர கதைகள் சட்டென்று பிடித்து போனதில் வியப்பேதும் இல்லைதான்!

அரஸ் - அட்டை!
ம. செ. - ஓவியம்!
வாண்டுமாமா அவர்கள், கௌசிகன் அவதாரத்தில் சற்றே முதிர்ந்த ரசனைக்கு எழுதிய "அறிவின் விலை ஒரு கோடி" என்ற "சித்திர புதினம்" வகை இதழும் பார்வதியில் வெளியானது! இதன் சிறப்பம்சம், இதற்கு ஓவியம் வரைந்தவர் எனக்கு(ம்) மிக மிக பிடித்தமான திரு. மணியம் செல்வன் அவர்கள்! (அட்டை பட ஓவியம் மட்டும் அரஸ் வரைந்தது!). ஜெ (ஜெயராஜ்) அவர்கள் பெண்களை வரைந்தால் அது கிளர்ச்சியூட்டும் வகையில் இருக்கும்! மாருதி அவர்களின் தெய்வீக பெண்களும், பெண்மை மிளிரும் ஆண்களும் எனது ரசனைக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தனர்! எனது பார்வையில் பெண்களை பெண்களாக வரைந்த மிகச்சில ஓவியர்களில் ம.செ.வும் ஒருவர்!

கபீஷ்!
வேட்டைக்காரன்!
இவற்றை தவிர, பூந்தளிரில் வெளியான கபீஷ் மற்றும் வேட்டைக்கார வேம்புவின் சித்திர சிறு கதைகள், பார்வதியில் தொகுப்புகளாய் வெளிவந்தன! இவைகள் வட இந்திய படைப்புகள்தான் என்றாலும் நம்மால் ரசிக்க முடிந்ததற்கு காரணம் அழகிய ஓவியங்களும், எளிமையான கதையம்சமும்தான்! 

தமிழ் காமிக்ஸ் இதழ்களுக்கே உரித்தான, "காலப்போக்கில் தரமிழக்கும் நோய்" பார்வதியையும் தாக்கியது! வாண்டுமாமா மற்றும் பூந்தளிர் சரக்கு தீர்ந்து போக ஆரம்பித்ததால், திடீரென்று ஒரு 'பாண்டுமாமா'(?!) உருவானார்!

மனதில் தங்காத சில வட இந்திய / அயல்நாட்டு கதைகள் சுமாரான மொழிபெயர்ப்பில் வெளியாகின! (இரும்புக்கை) மாயாவி என்ற பெயர் அட்டையில் இருந்தாலே மலிவான சரக்கும் விற்று விடும் என்ற ஒரு கால கட்டம் முன்பிருந்தது! அதே பாணியில் வாண்டுமாமாவின் பெயரை உல்டா செய்து கதைகள் வெளியிட்டதிலேயே அவர் எந்த அளவு பிரபலமாக இருந்தார் என்பதை எளிதில் உணரலாம்! 

பாண்டுமாமா!
சுமார் கதை!
சமீபத்தில் திருப்பூர் புத்தக கண்காட்சியில் வாண்டுமாமாவின் "மர்ம மாளிகையில் பலே பாலு"  வாங்கியபோது, பார்வதி சித்திர கதைகளின் ஞாபகம் ஒரு கணம் அதி பிரகாசமாய் ஒளிர்ந்து மறைந்தது! மாணவ பருவத்தில், இந்த கதைகள் கற்பனை கிணற்றினை வற்றாது கிளறிய அந்த இனிய காலகட்டம் திரும்பிட இனி ஒருபோதும் வாய்ப்பில்லைதான் - உயரிய தாளில், கனத்த புத்தகமாய் பாலுவை மீண்டும் படிக்க கிடைத்தாலும்!
 
பத்து ருபாய் பெறாத ஒரு ப்ளாக் ஆரம்பித்தாலே விளம்பரம் தேடும் இந்த காலத்தில், அவ்வளவு புகழ் இருந்தும் அதை சுய ஆதாயத்துக்கு பயன்படுத்தாத ஒரு நேர்மையான, எளிமையான மனிதராக வாண்டுமாமா அவர்கள் இருந்திருக்கிறார் என்பதை எண்ணும் போது வேதனைதான் மிஞ்சுகிறது! அதற்கு ஒரு சிறு சான்று, பார்வதி - பதிப்பாசிரியர் திரு.ஹரிராமனின் கீழ்க்கண்ட கடிதம்! ஏப்ரல் 21 அன்று பிறந்தநாள் காணும் வாண்டுமாமா அவர்களை வாஞ்சையுடன் ஒருமுறை நினைவு கூர்வோம்!

பிறந்த நாள் - ஏப் 21
வாண்டுமாமா!
பொறுமையாய் படித்ததிற்கு நன்றி நண்பர்களே! விரைவில் ரகளையான பல அனுபவங்களுடன், காமிக்ஸ் வேட்டை அத்தியாயம் ஐந்தில் உங்களை சந்திப்பேன்!

-தொடரும்-

வாண்டுமாமா பற்றிய சில சுவையான பதிவுகள் / தகவல்கள்:

கருத்துகள்

 1. நண்பர்களே! இத்தளத்தின் முகப்பு மற்றும் வடிவமைப்பை வெகுவாய் மாற்றி அமைத்துள்ளேன்! பிடித்த, பிடிக்காத அம்சங்களை பற்றிய உங்கள் கருத்தை கூறுங்களேன்! :)

  பதிலளிநீக்கு
 2. nanbare enathu computtaril screenai vida perusa theriyithu antha wirthai kuraingga

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சதீஷ்! ஆனால் முக்கிய பதிவை scroll செய்யாமல் படிக்க முடிகிறதா? (வலது பட்டையில் உள்ள கூடுதல் இணைப்புகள், ஒட்டு பெட்டி நீங்கலாக)...

   இது காமிக்ஸ் இதழ்களின் ஸ்கேன்கள் நிறைந்த தளம் என்பதாலேயே அகலத்தை 1280px என அமைத்துள்ளேன் - அதனினும் குறைத்தால், அவ்வளவு நேர்த்தியாய் தெரியவில்லை என்பது என் கருத்து!

   நீக்கு
 3. அருமை நண்பரே ! இந்த மாதிரி புத்தகம் எல்லாம் இன்றும் வைத்து உள்ளேர்களா ?. இந்த கதை எல்லாம் படித்தால் நண்பர்கள் பலர் "நீ என்னை சின்ன பையனா ?" என்கிறார்கள் . பல புத்தகங்களை நான் பாத்து காத்து வருகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. >>>"இந்த மாதிரி"<<<
   'அந்த' மாதிரி புக்ஸ் சேத்து வச்சாதான் தப்பு, கொழந்தங்க புக்ஸ் வச்சுருந்தா தப்பிலே பாஸ் ;)

   உண்மை என்னன்னா இப்போ இந்த புக்ஸ் வச்சுருக்கறதோட சரி! புல்லா மறுபடியும் படிக்க பொறுமை இருக்கறதில்ல! :)

   நீக்கு
 4. ஒரு வரி தமிழில் தட்டச்சு செய்யவே கை கால் குத்துது குடையேது ( எழுத்து கண்டுபிடிக்க முடியல ) . எப்படி இப்படி பக்கம் பக்கமா உங்களுக்கு கொட்டுது ? உங்க தொழிலே இதுதானா ? அதிலும் ஒவொரு லிங்க் வேற போடுறீங்க ( லிங்க் தமிழில் உருவாகுவது எப்படி ?)

  விஷயத்துக்கு வருவோம் :

  வாண்டுமாமா வின் சமிபத்திய நூல் ஓன்று " நீங்களும் செய்து பாருங்கள் " vaankineen நன்றாக உள்ளது . எப்படி இவரால் மட்டும் 80 தாண்டியும் 8 லையே நிற்கிறாரு? அதற்கு ஒரு புத்தகம் போட சொன்ன நல்லது. மாமா வின் முகவரி கிடைக்குமா ? கடுதாசி போட்டு ஆசிர்வாதம் வாங்கலாமே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா! இப்போ ப்ராஜெக்ட் முடிஞ்ச கேப்புல கொஞ்சம் டைம் கெடச்சிருக்கு, அதான்! மத்தபடிக்கு, சித்திரமும் கைப்பழக்கம், தமிழ் தட்டச்சும் விரல் பழக்கம்தான்! கூகுள் transliterate யூஸ் பண்ணறேன்!

   வாண்டுமாமா பற்றிய கூடுதல் தகவல்கள் விஸ்வாவுக்கு தெரிஞ்சிருக்கும்னு நெனைக்கறேன்!
   http://tamilcomicsulagam.blogspot.in/2010/03/vandu-mama-greatest-ever-story-teller.html

   >>>லிங்க் தமிழில் உருவாகுவது எப்படி?<<<
   அது ஈஸிதான், நியூ போஸ்ட் எடிடர்லேயே தமிழில் டைப் பண்ணலாம்! அப்புறம், எடிட்டர் மெனுல இருக்கற லிங்க் பட்டனை பிரஸ் பண்ணி தேவையான லிங்கை இணைக்கலாம்!
   http://support.google.com/blogger/bin/answer.py?hl=en&answer=58226
   http://support.google.com/blogger/bin/answer.py?hl=en&answer=41379

   நீக்கு
 5. பூந்தளிர் ராணி காமிக்ஸ் இதெல்லாம் என்னோட பெஸ்ட் பிரண்ட்ஸ் நண்பா, ஆனா இப்போ இந்த மாதிரி புக்ஸ் படிக்கிற பசங்க எல்லாம் இல்லை மொபைல் போன்ல ப்ளூ பிலிம் பாக்கிற பசங்கதான் இருக்காங்க நண்பா.. இதை நினைச்சாத்தான் வருத்தமா இருக்கு. கண்டிப்பா இந்த மாதிரி காமிக்ஸ் பூந்தளிர் புத்தகங்கள் வெளி வந்தா மிகவும் நன்றாக இருக்கும் அட்லீஸ்ட் இருக்கறவங்க ஸ்கேன் பண்ணி நெட்ல பப்ளிஷ் பண்ண நல்லாருக்கும்

  பதிலளிநீக்கு
 6. @Shiva: hmmm... new gen kids are busy with their tablets/PCs surfing internet / playing games :)

  பதிலளிநீக்கு
 7. நண்பருக்கு வணக்கம் உங்களின் பதிவு என்னையும் என் பால்ய வயதிற்குள் பயணம் செய்ய வைத்தது நானும் பூந்தளிர் அம்புலிமாமா வின் பரம ரசிகை ...........அந்த உலகமே தனி .........இன்னும் அதன் நினைவுகள் என்னில் நீங்காமல் இருப்பது என் பாக்கியம் .........ஆனாலும் பழைய புத்தக கடைகளில் தேடுகிறேன் மனதின் உற்சாகத்தின் அருமருந்தான அந்த புத்தகங்களை ..........கிடைத்தால் எனக்கும் அதை அனுப்புங்கள் படித்து விட்டு பத்திரமாக திருப்பி அனுப்புகிறேன் ( என்னடா இரவல் கேட்கிறாளே என்று என்ன வேண்டாம் நீங்கள் பெற்ற இன்பம் பூந்தளிர் பிரியர்களும் பெற வேண்டும் என்று நினைத்து அனுப்புங்கள் ........)நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவை படிததிற்கு மிக்க நன்றி தோழி! ஆனால் இத்தொடரின் ஒரு பகுதியில் குறிப்பிட்டது போல காமிக்ஸ் தவிர்த்து பூந்தளிர் போன்ற இதழ்களை சேமித்து வைக்க தோன்றவில்லை. சிறு வயதில், அவற்றையும் காமிக்ஸுடன் எக்ஸ்சேன்ஜ் செய்து விடுவேன்! இந்த காரணத்தினால் இன்றைக்கு என்னிடம் ஒரு பூந்தளிர் / பாலமித்ரா / அம்புலிமாமா இதழும் இல்லை! :( இருப்பினும் இவற்றில் தோன்றிய கதாபாத்திரங்களின் ஆங்கில வடிவம் (சுப்பாண்டி, காக்கை காளி, வேட்டைக்கார சாம்பு!) இன்றைக்கும் கிடைக்கிறது! வேண்டுமானால் அவற்றை வாங்குவதற்கான இணைப்பை தருகிறேன்! உங்களுக்கு உதவ முடியாததிற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்!

   நீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia