பிரின்ஸ், பார்னே, ஜின் மற்றும் கழுகு!

கண்ணா, கறை நல்லது! - அது உன் மனதில் இல்லாத வரை...!
அழுக்கான, பரட்டை தலை ஆசாமிகள் நமது அன்புக்குரிய நாயகர்களாகி போவது தமிழ்நாட்டில் மட்டும்தான் என்ற எண்ணம் யாராவது கொண்டிருந்தால் அதை தூக்கி உடைப்பில் போடுங்கள்! பெல்ஜிய கதாசிரியர் கிரெக்கும், ஓவியர் ஹெர்மன்னும் இணைந்து தயாரித்த  மேற்கண்ட நான்கு கதாபாத்திரங்கள் நம் மனதை அதே போல எளிதாய் கொள்ளை அடித்துவிடுவார்கள்! அப்படி ஒரு அட்டகாசமான பாத்திர படைப்பு!

இக்கதைகளில் தோன்றும் இன்னுமொரு அற்புத கதாபாத்திரம், இயற்கை! பார்ப்பவர் மனதை மயக்கி, அப்படியே இன்னொரு உலகத்திற்கு இட்டு செல்லும் வகையில், இயற்கையை அற்புதமாய் தம் சித்திரங்களில் வெளிப்படுத்தும் ஹெர்மன் அவர்களுக்கு, அமேசான் காட்டையே எழுதி வைத்தாலும் போதாது! தமிழில், எண்பதுகளின் பிற்பாதியில் திகில் காமிக்ஸ் மூலம் நமக்கு அறிமுகமான இவர்களின் சாகசம் இன்று லயன் கம் பேக் ஸ்பெஷல் வரை தொடர்கிறது!. பிரின்ஸ் குழுவை பற்றிய ஒரு சிறிய அறிமுகம் இதோ!

பெயர்
சிறு  அறிமுகம்

பிரின்ஸ் (Bernard Prince)

 
 இவர் ஒரு முன்னாள் இன்டர்போல் போலீஸ் இன்ஸ்பெக்டர்! தனது உறவினர் மூலம் கிடைத்த சொகுசு படகில், உலகம் சுற்றும் சாகச வீரர்! பரட்டை தலை, அழுக்கு உடை - இவரது வெளி அடையாளங்கள்! ஆனால் உள்ளுக்குள் மனிதர், ஹால்மார்க் சொக்க தங்கம்! நட்புக்காக உயிரை கொடுக்க கூட தயாராகிவிடுவார்! இடப்பக்கம் உள்ள 1970  பாணியிலான பிரின்ஸ் எனக்கு பிடிக்கும்! (வலது, 2010-ல்!)

பார்னே (Barney Jordan)

 


 ஒரு மதுக்கடையில் அறிமுகமாகி அதன் பிறகு ப்ரின்சுடன் உலகம் சுற்றும் வாலிப கிழவர். இவரையும் தண்ணியையும் பிரிக்க முடியாது, கடலில் மிதந்தாலும் அல்லது தரையில் நடந்தாலும்! கழுகை செலுத்தும் புலம்பல் மாலுமி!

ஜின் (Djinn)

 
 

 வார்த்தைகளால் வசீகரிக்கும் இந்த சிறுவன் ஒரு அனாதை! சட்டபூர்வமாக தத்து எடுக்கா விட்டாலும் பிரின்சை பொறுத்த வரையில் இவன் ஒரு மகனைப் போலதான்! பார்னேயை விரட்டுவது இவனது பொழுதுபோக்கு!

கழுகு (Cormoran)

 


 சிறிய ரக உல்லாச படகான இது, பிரின்சின் அதிகாரபூர்வ வீடு! இதற்கு சிறு கீறல் ஏற்பட்டாலும் ப்ரின்சுக்கு கோபம் தலைக்கேறி விடும்!


நண்பர்களே, இது ஒரு 2-in-1  பதிவு! தமிழ் காமிக்ஸில் நட்பை பறைசாற்றும் வகையிலான ஜோடிகளை பற்றிய ஒரு தொடர் பதிவை எழுத போவதாக இந்த பதிவில் நான் உதார் விட்டிருந்தது உங்களுக்கு அநேகமாக மறந்திருக்கலாம்! பிரின்ஸ் பற்றிய அறிமுக பதிவாக (புதிய வாசகர்களுக்கு) அமையும் அதே நேரம், பிரின்ஸ் குழுவின் நட்பை / நெருக்கத்தை பறை சாற்றும் கதைகள் ஒரு சிலவற்றை இப்பதிவில் மேலோட்டமாய் காண்போம்!1. நதியில் ஒரு நாடகம்! (திகில் 36):
1989-இல் சேலத்திலிருந்து மதுரை சென்ற ஒரு சமயம், சேலம் பேருந்து நிலையத்தில் வாங்கிய இதழ் இது! பேருந்து மதுரையை அடைந்த போது நான் பல தடவை இதை பார்த்து, ரசித்து, படித்து முடித்திருந்தேன்! இந்த கதை பற்றி இப்பதிவில் விரிவாய் எழுதலாம் என்றுதான் நினைத்திருந்தேன், ஆனால் நான் அறிந்த வரையில் ஏற்கனவே இரண்டு பேர் அந்த நல்ல காரியத்தை செய்து உங்களை என்னிடமிருந்து காப்பாற்றி விட்டார்கள்!
"பார்னே! உன் மரண ஓலம் என்னை வெறி கொள்ள செய்கிறது" என்றவாறு பிரின்ஸ் துப்பாக்கியுடன் பாயும் அந்த காட்சியை முதலில் படித்த போது ஏற்பட்ட மன அதிர்வு இன்று படித்தாலும் ஏற்படுவது ஆச்சரியமான ஒன்று! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே?! என் மனதுக்கு நெருக்கமான கதைகளில் இதற்கு ஒரு தனி இடம் எப்போதும் உண்டு! நான் பொக்கிஷமாய் வைத்துள்ள இதன் பிரதியிலிருந்து சில படங்கள்: 


முன் மற்றும் பின்னட்டை!


நண்பேண்டா...!


நதியில் ஒரு நாடகம் அட்டையின் மூலம்!2. நரகத்தின் எல்லையில்! (திகில் 41):
பார்னே, பிரின்சை காப்பாற்றும் இடம்! (நேரம் கிடைக்கும் போது சற்றே விவரித்திடுவேன்!)
   
3 . கொலைகார கானகம்! (திகில் 43):
பிரின்ஸ் தனது செல்ல கரடியை காப்பாற்றும் காட்சி! (நேரம் கிடைக்கும் போது சற்றே விவரித்திடுவேன்!)

நன்றி: இப்பதிவுக்கான சில வண்ணப்படங்கள் கீழ் கண்ட தளங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன!

கருத்துகள்

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia