(வேர்வைக்) கடல் யுத்தம், வள்ளுவர் சிலை, OK OK & கி.மு. கி.பி!
இதை போல ஒரு குழப்பமான உப தலைப்பை நீங்கள் பார்த்திருக்க முடியாதுதான்! இந்த தொடர் பதிவை இட்டதில் இருந்து நான் வாழ்ந்த(!) ஊர்களை எல்லாம் ஒரு தடவை(யாவது) எட்டிப்பார்த்திட வேண்டும் என்ற உந்துதல் அநியாயத்திற்கு அதிகமாகி இருந்தது! சென்ற வார இறுதியில் பெங்களூரிலிருந்து திருப்பூர் சென்றிருந்தேன்! பெங்களூர் திரும்பும் முன் சேலத்தில் நறுக்கென்று ஒரு nostalgic பயணம் அடித்தால் என்ன என்று ஒரு பல்ப் எரிந்தது! நேற்று (ஞாயிறு) பெங்களுர் திரும்ப இரவு பனிரெண்டு மணிக்கு சேலம்-பெங்களூர் KSRTC-இல் முன்பதிவு செய்துவிட்டு, திருப்பூரில் இருந்து காலை 11:30 மணிக்கு சேலம் கிளம்பினேன்! எப்படியும் சேலம் போய் சேர மதியம் இரண்டாகி விடும், இடைப்பட்ட பத்து மணி நேரத்தில், நாங்கள் குடியிருந்த ஆத்துக்காடு ஹௌசிங் போர்டு, படித்த பாரதி வித்யாலயா, காமிக்ஸ் வேட்டையாடிய பழைய பஸ் ஸ்டாண்ட் ஏரியா என எல்லாம் ஒரு எட்டு பார்த்து விட வேண்டும் என்று ஒரு பக்கா பிளான்!
இறங்கி, "புதிய வானம்ம்ம்ம்" என்றெல்லாம் பாட முடியாதபடிக்கு சுட்டெரிக்கும் வெயில். நிதானமாக நடக்க தொடங்கினேன், கிட்டதட்ட இருபத்தோரு வருடங்களுக்கு பிறகு வருவதால் எல்லாமே அன்னியமாக தெரிந்தது! பஸ் ஸ்டாண்டை முழு வட்டம் அடித்தபின் என்ன செய்வது என்று பிடிபடவில்லை. முந்தைய நாள் தோன்றிய திடீர் பல்வலியும், வறுக்கும் வெயிலும் எனது பொறுமையை சோதித்ததில், nostalgic பயண முடிவை மூட்டை கட்டி வைத்துவிட்டு, ஏதாவது தியேட்டரில் தஞ்சம் புக முடிவெடுத்தேன். சேலத்துக்கே உரித்தான குறுகலான ஆட்டோக்கள் ஒன்றும் தென்படவில்லை, எங்கும் ஷேர் ஆட்டோ மயம்தான்!
காலியாக நின்று அலறிக்கொண்டிருந்த ஒரு ஷேர் ஆட்டோவிடம்:
~~வேணாம் மச்சான் வேணாம்ம்ம்ம்...~~
இங்கே ஒரு கல் ஒரு கண்ணாடி எங்க ஓடுது?
~~இந்த பொண்ணுங்க~~
இந்நேரம் தமிழ் படம் போட்டுருப்பான், சார்! சங்கீத் போறீங்களா? இங்கிலீஷ் படம் ஓடுது!
இந்நேரம் தமிழ் படம் போட்டுருப்பான், சார்! சங்கீத் போறீங்களா? இங்கிலீஷ் படம் ஓடுது!
உட்கார்ந்தேன், அங்க வேற தியேட்டர் இருக்கா?
~~கடல் போல காதல் ஒரு சால்ட்டு வாட்டரு~~
ஆங்?
~~டிரவுசர் அவுருண்டா~~
கொஞ்சம் சவுண்டை குறைக்கறீங்களா?
~~ஸ்ஸ்ஸ்~~
ஓட்டிக்கொண்டே என்ன என்பது போல பார்த்தார், டிரைவர்.
சங்கீத் பக்கத்துல வேற என்ன தியேட்டர் இருக்கு? 20 வருஷம் கழிச்சு வர்றேன் எல்லாம் மாறியிருக்கு!
அவர் முகத்தில் ஒரு திடீர் உற்சாகம், அப்படியா?! - பெரிதாக புன்னைகைத்தபடி, இருந்துச்சு சார், நெறைய இருந்துச்சு - டக்கென்று ஒரு உள்ரோட்டை காட்டி - அந்தா அப்படி போனா கைலாஷ் பிரகாஷ், கீதாலயா - நெறைய தியேட்டர் இடிச்சு கட்டறாங்க - இடதில் கை காட்டி - இங்க சாந்தி இருந்துச்சு என்றபடி லாவகமாக சங்கீத் எதிரில் நிறுத்தினார்!
அட ரொம்ப பக்கம்தான் மனதில் நினைத்து, பணத்தை கொடுத்தவாறே, இங்க பழைய புக் கடை எல்லாம் எங்க இருக்கு என்றேன்! விநோதமாக பார்த்து, வள்ளுவர் சிலை பக்கம், SBI-க்கு முன்னாடி என்று கிளம்பினார்.
சங்கீத்தில் கடல் யுத்தம் (Battleship), சுப்ரகீத்தில் மை! லியாம் நீசன் - பேர்தான் அப்படி, ஆனா நல்ல நடிகர் :), போஸ்டரில் இருந்த நம்பிக்கையில் சங்கீத்தின் AC குளிரில் நுழைந்தேன். நான் ஆங்கில படத்தை தமிழில் பார்ப்பது இது மூன்றாவது தடவை! பூமி போன்ற சுற்று சூழலுடன், வாழத் தகுதியுள்ள ஒரு கிரகத்தை கண்டுபிடித்து அதற்கு NASA வழக்கம் போல 'வாங்க பழகலாம் சிக்னல்' அனுப்புகிறது! பிறகு தமிழ் பட பாணியில் நாயகன், நாயகி அறிமுகம். நாயகிக்கு நடு இரவில் சிக்கன் பர்ரிடோ சாப்பிட வேண்டுமாம், இவரும் கடையை உடைத்து, பணம் வைத்து விட்டு வாங்கி வருவாராம். நாயகியின் அப்பா, நாயகனின் அண்ணன் வேலை பார்க்கும் யுத்த கப்பலின் தலையாம்! டென்ஷன் ஆன அண்ணன் இப்படி தறுதலையாக சுத்தாமல் நாயகனை கடற்படையில் சேரச் சொல்கிறார் !
இப்படி ஆரம்பித்ததுமே அடுத்து என்ன நடக்கும் என தெரிந்து விடுகிறது! இது போன்ற ஹாலிவுட் படங்களுக்கே உரித்தான எல்லா அம்சங்களும் அடுத்தடுத்து தலை காட்டின!. ஆஜானுபாகுவான ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவர் ஒருவர் போரில் கால் மற்றும் தைரியம் இழந்தவராக காட்டப்படுகிறார். ஆனால் இறுதியில் அவரும் அசத்துவார் என நமக்கு அப்போதே தெரிந்து விடுகிறது. அப்புறம் தாடி வைத்த ஒரு இளம் விஞ்ஞானி, படம் முழுக்க 'ஆயிரத்தில் ஒருவன்' ஆண்ட்ரியா கெட்டப்பில் நாயகி, நாசாவின் சிக்னலை நூல் போல பிடித்து திடும் என வந்திறங்கும் விண்கலங்கள், மொக்கையாய் அவை போர்க்கப்பல்களை தாக்கும் விதம் (நூற்றுக்கணக்கான பெரிய பீர் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டுகளை கப்பல்கள் மேல் வீசி தாக்குவார்களாம்!). சூரிய ஒளி பட்டால் அந்த வேற்று கிரகவாசிகள் தாங்க மாட்டார்கள் என்று ஒரு புருடா வேறு. இதை எல்லாம் நாங்க மார்ஸ் அட்டாக்ஸ்லேயே பார்த்தாகி விட்டது! என்ன, அதுல மியூசிக் இதுல சூரிய ஒளி! எதிர்பார்த்த விதத்தில் பட இறுதியில் நாயகருக்கு வீரத்தோடு விவேகமும் திடீரென வந்துவிட, வேற்று கிரக வாசிகளின் கண்களில் சூரியனை விட்டு ஆட்டுகிறார். அவ்வளவு நேரம் தலை காட்டாத விமான படையினர் எஞ்சியிருக்கும் ஏலியன்சை அழிக்க விர் விர்ரென தலை மேல் பறக்க நான் தலை தெறிக்க வெளியில் ஓடி வந்தேன்!
வழியில் ஒரு தள்ளு வண்டியில் பழைய புத்தக கடையை பார்த்ததும் குஷி தொற்றிக்கொண்டது!
காமிக்ஸ் இருக்கா?
இருக்கு... படம் போட்ட புக்கு, சி.டி. இருக்கு - காட்டினார் - எல்லாம் செக்ஸ் சரக்குதான்!
அடப்பாவிகளா, காமிக்ஸுக்கு இப்படி ஒரு அர்த்தமா, நொந்து கொண்டேன். மணி ஐந்தரை ஆகி இருந்தது! கைலாஷ் பிரகாஷ் இருந்த திசையில் நகர்ந்தேன் - ஒரு காலத்தில் காமிக்ஸ் வேட்டை ஆடிய களம்! OK OK ஓடிக்கொண்டிருந்தது. பக்கத்தில் லாரி ஸ்பேர் பார்ட்ஸ் கடைகளை தவிர வேறு எதுவும் காண கிடைக்கவில்லை. சின்ன வயதில் ஓரளவு சுத்தமாக இருந்த அந்த ஏரியா இப்போது வேறு நிறத்தில் தெரிந்து மனதை கஷ்டப்படுத்தியது! கீதாலயா தூரத்தில் தெரிந்தது - புணரமைத்து கொண்டிருக்கிறார்கள் போலும்! இன்னொரு ஆட்டோ பிடித்து வள்ளுவர் சிலையருகில் இறங்கினேன்! இடது பக்கம் இருந்த சந்தில் ஓரிரு புத்தக கடைகள் திறந்திருந்தன! பள்ளி, கல்லூரி பாட புத்தகக் கடைகள்தான்! அருகே சென்று பார்த்ததில் ஓரிரு மாத நாவல்கள் வைத்திருந்தார்கள். ஒரு சின்ன பெண் அமர்ந்திருந்தார், நம்பிக்கையுடன் கேட்டேன்...
காமிக்ஸ் இருக்கா?
நீங்க படிக்கற மாதிரியா சார்?
ஆமா, இல்லை என்று குளறி, உங்ககிட்ட இருக்கறத காட்டுங்க என்றேன்!
Tinkle ஆங்கில இதழை காட்டினார்
வேற இருக்கா?
இல்லை சார்....
மற்ற கடைகளில் அதுவும் இல்லை. அன்று ஞாயிறு என்பதால் நிறைய கடைகள் மூடி உள்ளனவாம்! திங்களன்று வந்தாலும் காமிக்ஸ் கிடைக்காது என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது! அருகில், கலெக்டர் ஆபீஸ் வெகுவாக மாறி அட்டகாசமாக இருந்தது (புதிதோ?)! அதன் பின்புறம் சர்ச் கம்பீரமாய் தெரிந்தது. சர்ச்சை ஒட்டிய சாலை நடைமேடையில் முன்பு பழைய புத்தக கடைகள் நிறைய இருக்கும். ரோடு அகலமாகி, நடைமேடையை விழுங்கியிருந்தது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், கடல் யுத்தம் மகா காவியத்தை பார்த்து ரொம்பவே பேஜாராகி இருந்தேன்! மருந்துக்கு ஒரு காமிக்ஸ் புக் கூட கிடைக்காததும் எரிச்சல் படுத்தியது! சரி ஈவினிங் ஷோ போடுவதற்குள் ஓகே ஓகேயாவது பார்ப்போம் என ஆட்டோவுக்கு கை காட்டினேன்.
புது பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல, ஓகே ஓகே எங்கே ஓடுது?
ஏறுங்க, அறுபது ரூபா!
பேரம் பேசும் மன நிலையில் நான் இல்லை. ARRS மல்டிப்ளெக்ஸில் இறக்கி விட்டார். இரண்டாம் வகுப்பு முன் வரிசையில்தான் கிடைத்தது, சிறிது நேரத்தில் ஹவுஸ்புல் போட்டு விட்டார்கள். இன்னொரு ஸ்க்ரீனில் கர்ணன்! தியேட்டருக்குள், பக்கத்துக்கு சீட்டுக்காரர்கள் புலம்பினார்கள். 'இவனுகளே ஹவுஸ்புல் போட்டு, இவனுகளே ப்ளாக்குல விக்கறானுங்க!' அவர்கள் சொல்வது உண்மையோ என எண்ணும் விதத்தில் பின் வரிசைகள் ரொம்ப நேரத்துக்கு காலியாகவே இருந்தன!
படத்தில் சந்தானம் போனிலும் நேரிலும் அறிமுகமாகும் போது விசில்கள் பறந்தன! ரொம்ப குண்டடிக்காதீங்க சந்தானம்! :) மனிதர் முகபாவத்திலும், குளறல் டயலாகிலும் டெர்ரர் பண்ணுகிறார், factu factu! சந்தானத்தின் வாய்ஸ் மாடுலேசன் பற்றி படத்தில் கிண்டலடிக்கும் உதயநிதி படம் முழுவதும் ஒரே மாடுலேசனில் பேசுகிறார். திரையில் இருந்து நான்காவது வரிசையில் உட்கார்ந்து இருந்தேன், ஹன்சிகாவை
பார்த்தபோது என் மனநிலை எப்படி இருந்திருக்கும் என கொஞ்சம் யோசித்து
பாருங்கள்! திரை முழுக்க வியாபிக்கிறார்! சந்தானத்தை விட பெரிய தொப்பை!
படம் முழுக்க பிரெண்ட்சிடம் பேசிக்கொண்டே, சிரித்துக்கொண்டே, நடந்துகொண்டே இருக்கிறார்!
டைமிங் டயலாக் துணையுடன் ஜம்மென்று நகரும் படம் பாண்டிச்சேரி வந்ததும் ஜாம் ஆகி நிற்கிறது! ஒரே சவ சவ... தேவையே இல்லாமல், ரஜினி ரசிகர் மன்ற தலைவர் என சொல்லிக்கொண்டு ஆர்யா வந்து போரடிக்கிறார்! ராஜேஷின் அடுத்த பட ஹீரோ யாரோ தெரியாது, ஆனால் அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நிச்சயம் உதயநிதி ஆஜராவார் என்பது மட்டும் தெரிகிறது. கதைக்குதான் மெனக்கெடவில்லை, கிளைமேக்சுக்குமா? எது எப்படியோ, சந்தானத்துக்காக சந்தா கட்டி பார்க்கலாம்! :) இன்டர்வலில் பில்லா-2 ட்ரைலர், தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ்!
வெளியில் வந்தபோது மணி பத்தை நெருங்கிக்கொண்டிருந்தது! திருப்பூரில் காலையில் கரண்ட் இல்லாத காரணத்தால் KSRTC டிக்கெட் பிரிண்ட் எடுக்காதது திடீரென ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது! SMS-இல் இ-டிக்கெட் இருந்தாலும் ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து விட்டால் பதட்டமில்லாமல் இருக்கலாம் என எங்கே தேடியும் பிரவுசிங் சென்டர் சிக்கவில்லை - மூடி விட்டிருந்தார்கள்! மறுபடியும் சரவண பவனிலேயே டிபனை முடித்துக்கொண்டேன்! இரவு 11:15 வரை திறந்து இருக்குமாம்! ஹோட்டலுக்கு பக்கத்தில் இருந்த புத்தக கடையில் கண்ணை மேய விட்டபோது மதனின் கி.மு. கி.பி. கிடைத்தது, குமுதத்தில் தொடராக வந்தபோது விட்டு விட்டு படித்தது! - வாங்கிக்கொண்டேன்.
பேருந்து நிலையத்தில் நுழைந்தால் வலது பக்கத்தில் உள்ள கடைகளில் ஒன்று, "24 hour internet browsing" என வரவேற்றது! டிக்கெட் பிரிண்ட் எடுத்துக் கொண்டு, ஹன்சிகா மாதிரி தள தளவென இருந்த KSRTC பேருந்தருகில் நின்ற போது எங்கேயோ இருந்து அடித்த குளிர்ந்த காற்று, காலையிலிருந்து உடலில் படிந்து போன வேர்வை படலத்தை மெதுவாய் வருடி எல்லாம் ஓகே ஓகே என்றது!
பி.கு. பி.கு.:
- தனியாக ஒரு ஊரை சுற்றுவது என்பது எவ்வளவு கடினமான விஷயம் என்பது நன்றாக புரிந்தது! ஏனோ தெரியவில்லை, கேமரா கையில் இருந்தும் போட்டோ எடுக்க சங்கடமாக இருந்தது! மொபைல் கேமராவில் பஸ் ஸ்டாண்டை எடுத்ததோடு சரி! நண்பர்களோடு போயிருந்தால் இந்த சங்கடம் இல்லாதிருந்திருக்குமோ?!
- என்னடா காமிக்ஸ் பற்றியும் இல்லாமல், பயணக் குறிப்பாகவும் இல்லாமல், திரை விமர்சனமாகவும் இல்லாமல், மொக்கையாய் ஏன் ஒரு மூன்றும் கெட்டான் பதிவு என புருவம் உயர்த்துபவர்களுக்கு: இது வரை 63 பேர் அளித்த ஓட்டுகளில், காமிக்ஸ் பற்றி மட்டுமேதான் எழுதவேண்டுமென்பதில்லை என்ற முடிவு வந்துள்ளதால்தான்! இழுத்து மூட சொன்ன 14 அன்பு நெஞ்சங்கள் என்னை சகித்துக்கொள்ள வேண்டுகிறேன்! :)
*** OK OK & Battleship போஸ்டர்கள் - நன்றி http://www.wikipedia.org/ ***
சேலம் பெயர் காரணம் குறித்த ஒரு சுவையான பதிவு, அதிலுள்ள பின்னூட்டங்களையும் படிக்க தவறாதீர்கள்!
பதிலளிநீக்குபடிக்க மிகவும் சுவாரசியமாக இருந்தது. பழைய இடங்களை 20 வருடங்கள் கழித்துப் பார்க்கும் அனுபவம் அருமை.
பதிலளிநீக்குநன்றி நண்பரே! :) இன்னும் பல அனுபவங்கள் தொடரும், ஜாக்கிரதை!
நீக்குஒரு திருமணதிற்கு போனபோது பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள திரை அரங்கில் ( இரட்டை திரை: அரங்கம் பெயர் மறந்து விட்டது ) கௌதமி நடித்த ஒரு பாம்பு படம் பார்த்ததில் அனாசின் மாத்திரை இரண்டு சாபிட்டாலும் போகாத தலைவலி ......அங்கு உள்ள கோயில்..... சில மாறாக முடியாத நினைவுகள் எல்லாம் இந்த பதிவை படித்ததும் வருகிறது ,,,
பதிலளிநீக்குஎழுத்து நடை நன்றாக உள்ளது . தொடரட்டும் உங்கள் பாதை
மிக்க நன்றி நண்பரே! :) Nostalgic பயணங்கள் தொடரும்! ;)
நீக்குbtw, அது கைலாஷ் / பிரகாஷாக இருக்கக் கூடும்!
டியர் கார்த்திக் , சேலம் change ஆகி 15 வருடம் ஆச்சு .நான் சேலம் ல் தான் BDS படித்தேன் 96 batch .அபோது பழைய பஸ் stand ல் நிறைய காமிக்ஸ் 5 rs க்கே கிடைத்தது .இப்போது காமிக்ஸ் வெறியர்கள் பிடியில் உள்ளது. 6 மாதம் முன்பு ஒரு பழைய vip sutcase நிறைய காமிக்ஸ் வெய்து இருந்தாங்க .தலை வாங்கி 250 rs சொன்னங்க .நீங்களே வெய்து கொள்ளுங்க என்று வந்து விட்டேன் . காமிக்ஸ்யை பதுக்கி வெய்து உள்ளார்கள் ரெகுலர் ஆட்கள் வந்தால் அவர்களிடம் நல்ல money க்கு கல்லா கட்டி விடுகிறார்கள். சில நல்ல கடைகளும் இருக்கத்தான் செய்கிறது .போன வாரம் பிசாசு pannai லக்கி luke , தங்க வேட்டை ஆர்ச்சி தலா 5 rs க்கு தான் எடுத்தேன்.
பதிலளிநீக்கு@Dr.Sundar : ரொம்ப வேதனையான விசயம்தான்! :( எப்போது திருந்துவார்களோ?!
பதிலளிநீக்குsir welcome to salem
பதிலளிநீக்குyour writing style Ok Ok
marupadiyum varuga balaram
பதிலளிநீக்கு