தி அமேஸிங் ஸ்பைடர்மேன் - 2012 - எங்கேயோ பார்த்த ஞாபகம்!

நீங்கள் 80-களிலோ அல்லது 90-களின் முற்பாதியிலோ பள்ளி மாணவராக இருந்த பட்சத்தில், முதலில் இங்கே சென்று ஸ்பைடர்மேன் & ஹி-மேன் பற்றிய தூர்தர்ஷன் நினைவுகளை ஒருமுறை தூசு தட்டிவிட்டு வந்தால் இன்னும் கொஞ்சம் கிக்காக இருக்கும்! ஸ்பைடர்மேன் மூவி சீரிஸ் 2002-இல் தொடங்கி, 2004-இல் பார்ட் 2, 2007-இல் பார்ட் 3 என இதுவரைக்கும் மூன்று படங்கள் வெளிவந்தது! முதலிரண்டு பாகங்களும் சிறந்த வரவேற்பை பெற்றன! மூன்றாவதில் கோட்டை விட்டதை பார்ட் 4 எடுத்து சரிசெய்வதை பற்றி யோசிக்காமல், ரீபூட்டியிருக்கிறார்கள்!

நடிகர்களை மாற்றத்தான் இந்த ரீபூட் என்றால் சிரிப்புதான் வருகிறது! ஹாலிவுட்காரர்கள் நம் தமிழ் மெகா-சீரியல் இயக்குனர்களிடம் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது! சிம்பிளாக, இவருக்கு பதில் இவர் என்று எழுத்துகளை காட்டுவதோடு முடிய வேண்டியதை - ஆற அமர முதலில் இருந்து சொல்கிறார்கள்! இப்படி எல்லாம் யாரும் கேலி செய்து விடக்கூடாதே என்று அங்கே இங்கே கொஞ்சம் மாற்றங்களை அள்ளித்தெளித்திருக்கிறார்கள்! (ஒரிஜினல் காமிக்ஸை ஒட்டி எடுத்திருக்கிறார்களாம்!). நீங்கள் மேற்சொன்ன 2002 ஸ்பைடர்மேன் மூவி சீரிஸை பார்க்காதவர் என்றால் இந்த விமர்சனத்தில் சொல்லப்படும் நெகடிவ் கருத்துக்களை உள்வாங்காமல், தாராளமாக இந்தப் படத்தை பார்க்கலாம்!

கதையை தெரிந்து கொள்ள விரும்பாதவர்கள் கீழுள்ள சிவப்பு பகுதியை தவிர்த்துவிட்டு படியுங்கள்!

வழக்கமான, ஸ்பைடர்மேன் எப்படி உருவானார் என்ற கதையை சிறிய மாறுதல்களோடு சொல்லுகிறார்கள்! சிறு வயதில் ஸ்பைடர்மேனின் பெற்றோர்கள் அவரை அங்கிள் பென் மற்றும் ஆன்டி மேயிடம் ஒப்படைத்துவிட்டு மாயமாகிறார்கள். கைப்புள்ளையாகவே வளரும் ஸ்பைடர்மேனிடம், அவரது மரபியல் விஞ்ஞானி தந்தை - Richard Parker மறைத்து வைத்த ஒரு தோல்ப்பை கிடைக்கிறது, அதில் உள்ள கோப்புகள் தந்தையின் முன்னாள் நண்பரான Dr.Connors-ஐ  தேடிச்செல்ல செய்கின்றன! அவர் பணிபுரியும் Oscorp நிறுவனத்தில் யாருக்கும் தெரியாமல் சிலந்திகள் நிறைந்திருக்கும் ஒரு ஆய்வகத்தை வேவு பார்க்கும் போது, ஒரு சிலந்தி அவர் கழுத்தின் பின்பகுதியை கடித்து விடுகிறது! அதனால் அவர் உடல் மற்றும் நடவடிக்கைகளில் சற்று சிலந்தித்தனம் வந்துவிடுகிறது! கல்லூரியில் முறைத்துக்கொண்ட மாணவனை பழி வாங்குகிறார், தோழி Gwen Stacy-இன் நட்பும் காதலாக மாறுகிறது! 

ஆனாலும் பொறுப்பில்லாமல் திரிவதால் தனது அங்கிளின் மரணத்திற்கு தானே காரணமாகிறார்! இந்த சம்பவத்திற்கு பிறகு இரவானால் தனது அங்கிளை கொன்றவனை தேட ஆரம்பிக்கின்றார் - கூடுதலாக மற்ற சமூக விரோதிகளையும் நையப்புடைக்கிறார்! தந்தையின் நண்பர் டாக்டர் கானர்சை சந்தித்து தந்தை எழுதி வைத்திருந்த சில சூத்திரங்களை பகிர்ந்து அவரின் விபரீத ஆராய்ச்சிக்கு மறைமுக காரணமாகிறார்! க்வெனின் தந்தை நியூயார்க் நகர போலீஸ் கேப்டன் - ஸ்பைடர்மேன் சமூகவிரோதிகளை பிடித்துக் கொடுத்தாலும் நியூயார்க் நகர போலீஸின் அபிமானத்தை பெற முடியாமல் தவிக்கிறார்! இந்நிலையில் டாக்டர் கானர்ஸ் ஸ்பைடர்மேன் கொடுத்த சூத்திரத்தின் உதவியுடன் மனிதர்களின் பாதிக்கப்பட்ட உடலுறுப்புகளை மீண்டும் தானாக வளர்ச் செய்யும் ஒரு சீரத்தை கண்டுபிடித்து அதை தன் மீதே பிரயோகித்துப் பார்க்கிறார்! அவருடைய இழந்த கையும் மீண்டும் வளர்ந்து விடுகிறது! ஆனால்........????? மீதி கதையை காசு கொடுத்து தியேட்டரில் பார்க்கவும்! :D

பழைய ஸ்பைடர்மேன் படங்களின் ஹீரோ Tobey Maguire - பார்த்தாலே பிடிக்கும் ரகம் அல்ல என்றாலும் பார்க்க பார்க்க பார்க்கராக பிடித்துப் போனார்! அவருக்கு பதில் Andrew Garfield - பூனையை ஞாபகப்படுத்தும் பெயர் மற்றும் கண்கள் - இருந்தாலும் மனிதர் நன்றாகத்தான் இருக்கிறார், நடிக்கிறார்! பழைய ஸ்பைடர்மேனின் ஹீரோயின் Kirsten Dunst-ஐ எனக்கு கொஞ்சமும் பிடிக்காது - தூக்கத்தில் இருந்து எழுந்து வந்ததை போன்ற ஒரு அழுமூஞ்சி முகம்! அவருக்கு பதிலாக Emma Stone - எவ்வளவோ பரவாயில்லை. ராமராஜனுக்கு பிறகு அதிகளவில் பச்சை வண்ணத்தை பயன்படுத்தியவர்கள் ஹாலிவுட் நடிகர்களாகத்தான் இருக்க வேண்டும்! ஹாலிவுட்டுக்கு பச்சை மேல் என்ன மோகமோ தெரியவில்லை, இந்த படத்தின் வில்லனும் பச்சை நிறத்தில் - இராட்சத பல்லி வடிவத்தில்! ஏற்கனவே பார்த்துப் பழகிய பல காட்சிகள் இந்த படத்திலும்! (உதாரணம் - பிரிட்ஜ் சண்டை காட்சிகள், ஸ்பைடர்மேன் தனது சக்தியை பரிசோதிக்கும் இடங்கள்). பெரிய மாறுதல் வெப் ஷூட்டர் மட்டும்தான் - சிலந்தி வலைகளை பீய்ச்சும் கருவி! நமது 'இந்தி'ய நடிகர் இர்ஃபான் கான் இதில் வில்லனாக நடிக்கிறார் என்றொரு புரளி இருந்தது - திறமையான நடிகர், ஒரு சில காட்சிகளில் மட்டும் வந்து டாக்டர் கானர்ஸை மிரட்டிவிட்டு நமது தமிழ் பட ஹீரோயின்கள் போல திடீரென காணாமல் போகிறார்!

3D-யில் பார்த்தே ஆக வேண்டும் என்று மல்டிப்ளெக்ஸ் (ஃபன் சினிமாஸ்) சென்று பார்த்தேன் - டிக்கெட் 220, 3D சார்ஜ் 30, கன்வினியன்ஸ் சார்ஜ் 15, வாட்டர் பாட்டில் 40, பாப்கார்ன் 90 என கிட்டத்தட்ட 400 ருபாய் வேட்டு! படத்தை 3D-யில் பார்த்து தலைவலிதான் மிச்சம், முக்கால்வாசி படத்தை கண்ணாடியை கழட்டி வைத்து விட்டே பார்த்தேன்! இதற்கு நிம்மதியாக 70 ருபாய் குடுத்து வீட்டுப் பக்கத்தில் இருக்கும் சிங்கிள் ஸ்க்ரீனிலேயே  பார்த்திருக்கலாம்! ஹ்ம்ம், ஆசை யாரை விட்டது!

இது போன்ற படங்களுக்கு முக்கிய பலமே வில்லன்கள்தான், இதில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை! பேட்மேன் படத்தை ரீபூட் செய்தார்கள், அதில் ஒரு அர்த்தம் இருந்தது - ஓவர் தி டாப் பேட்மேன் படங்களையே பார்த்துப் பழகிய நமக்கு ஒரு சீரியஸ் பேட்மேன் கிடைத்தார்! ஜேம்ஸ்பாண்டை ரீபூட் செய்தார்கள், அதுவும் வித்தியாசமாக அதிரடியாக இருந்தது! ஸ்பைடர்மேனிலோ - டெக்னிகலாகவும் முன்னேற்றம் இல்லை, கதை அமைப்பிலும் சொல்லிக்கொள்ளும்படியான மாற்றம் இல்லை! படம் நன்றாகத்தான் இருக்கிறது, இருந்தாலும் பார்த்த படத்தையே மீண்டும் பார்த்த ஒரு ஃபீலிங்! அது உங்களுக்கு ஒகே என்றால் தயங்காமல் பார்க்கலாம்!

தி அமேஸிங் ஸ்பைடர்மேன் - 2012 / * * * / சரியாக ரீபூட்டவில்லை!

கருத்துகள்

  1. இதற்காக தான் பல்லு கூட வெளக்கமால் ஐந்து மணிக்கே ஒரு பதிவு போடிங்களா....நல்லாவே இருக்குது விமர்சனம் spiderman அப்பா அம்மா nick furyயோட shield ரகசிய அமைப்பில் வேலை செய்து கொண்டு இருப்பாங்க நண்பா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பல்லு கூட வெளக்கமால்//
      :) :) :)

      மிட்நைட் ரெண்டு மணிக்கு எவன் பல்லு வெளக்குவான்??!!! ;)

      நீக்கு
    2. இல்லை நண்பா ஐந்து மணி அளவில் உங்கள் பதிவை tamil10 பார்த்தேன் அப்போ ஒரு மணி நேரத்திற்கு முன்னர் பகிர்ந்தது என இருந்தது அதான் அப்படி நினைத்து விட்டேன்...

      நீக்கு
  2. நண்பா இதற்கு முன் வந்த spiderman comicsயோடு தொடர்பு இல்லை அதில் உள்ள வில்லன் மட்டுமே அடிபடையாய் கொண்டு எடுத்தனர் அமேசிங் காமிக்ஸ் எப்படி எழுதபட்டதோ அதன் படியே ஏறுகின்றனர் அதனால் காமிக்ஸ் படித்தவர்களுக்கு ரொம்ப பிடிக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்களுக்கு நன்றி நண்பரே! நான் ஸ்பைடர்மேன் காமிக்ஸ் படித்தது இல்லை! மேலே விமர்சனத்தில் இந்த வரியை ஒட்டி விட்டேன்! :)
      //ஒரிஜினல் காமிக்ஸை ஒட்டி எடுத்திருக்கிறார்களாம்!//

      நீக்கு
  3. இன்னைக்கு நைட் ஷோ இன் ஈரோட். ஆகையால் நோ ரீடிங்.

    பதிலளிநீக்கு
  4. அது மட்டும் இல்லாமல் spiderman படத்தை எடுத்த டைரக்டர்ருக்கும் சோனி நிறுவனத்திற்கும் ஏதோ வில்லனில் பிரச்சனையோம் அதான் அந்த பாகத்தை தொடராமல் இதை புதிதாய் தொடர்தார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம் ஒரு மேட்டரா? வேறு டைரக்டர் வைத்து பார்ட் 4 எடுத்திருக்கலாம்!!!

      நீக்கு
  5. இந்த படத்தின் இதற்கு மேல் வரும் கதையை தெரிந்து கொள்ள ஆசை பட்டால் டிஸ்னி தமிழ் இன்னும் ஆரம்பத்தில் இருந்து திரும்ப திரும்ப போடுராணுக பார்த்து கொள்ளவும் சனி ஞாயிறு ஆறு மணியில் இருந்துன்னு நினைக்கிறன்...

    பதிலளிநீக்கு
  6. //ஹீரோ Tobey Maguire - பார்த்தாலே பிடிக்கும் ரகம் அல்ல என்றாலும் பார்க்க பார்க்க பார்க்கராக பிடித்துப் போனார்//

    //ஹீரோயின் Kirsten Dunst-ஐ எனக்கு கொஞ்சமும் பிடிக்காது - தூக்கத்தில் இருந்து எழுந்து வந்ததை போன்ற ஒரு அழுமூஞ்சி முகம்//

    உண்மை தான் நண்பா

    //படத்தை 3D-யில் பார்த்து தலைவலிதான் மிச்சம், //

    எனக்கும் 3D என்றால் ஆவதில்லை நண்பா

    பதிலளிநீக்கு
  7. தல இப்பதான் 2 nd ஷோ பார்த்து வந்தேன் . 20 நிமிட படம் துண்டாக்க பட்டு விட்டது. சிலந்தி கடிக்கும் முக்கிய இடம் operator க்கு பொறுக்காமல் கத்திரி போட்டு விட்டார் .

    கிராபிக்ஸ் தவிர மற்றவை சொதப்பல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //operator க்கு பொறுக்காமல் கத்திரி போட்டு விட்டார்//
      அடப்பாவமே! பணம் refund கேட்டீர்களா? :)

      நீக்கு
  8. சிவக்கு எழுத்துக்களை படிக்கவில்லை. படம் பார்த்தபிறகு படிக்கிறேன்.

    Tobey Maguire-ஐ தவிர்த்து இன்னொருவரை ஸ்பைடர் மேனாக எண்ணத் தோன்றவில்லை.

    அமேசிங் ஸ்பைடர் மேன் கார்டூன் தொடரை டிஸ்னி எக்ஸ்டியில் பார்த்திருக்கிறேன். படம் எப்படி இருக்கிறதென்று பார்த்துவிட்டு சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சிவக்கு எழுத்துக்களை படிக்கவில்லை//

      சிவப்பு எழுத்துக்களை....

      நீக்கு
    2. இதற்கு முந்தைய படங்களை பார்த்துள்ளீர்களா?

      நீக்கு
    3. நான் ஒரு சூப்பர் ஹீரோ..... படங்களின் ரசிகன் என்று சொல்ல வந்தேன்.!

      ஸ்பைடர் மேன் மூன்று படங்களையும் பார்த்திருக்கிறேன். மூன்றுமே பிடித்திருந்தது. ஆனால் இந்த படம் பிடிக்கவில்லை. நெட்டில் பார்த்தபோது கூட ஓட விட்டு.. ஓட விட்டு.. ஐ மீன் ஃபார்வர்ட் செய்து பார்த்தேன். (ஆங்கிலம் புரியாது என்பது வேறு!)

      :D :D :D

      நீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia