சலூனில் சில Sci-Fi சிந்தனைகள்!

எப்படித்தான்  எல்லாருக்கும் சனி, ஞாயிறு காலையில் மட்டும் முடி வெட்டிக்கொள்ள வேண்டும் என்ற ஞானோதயம் பிறக்குமோ தெரியவில்லை! காலையில் ஆறரை மணிக்கு போனால் தாத்தாக்கள் கூட்டம், எட்டு மணிக்கு போனால் அங்கிள்கள் கூட்டம், பத்து மணிக்கு போனால் என்னை போன்ற யூத்துகள் கூட்டம் என வார இறுதியில் சுறுசுறுப்பாக இருக்கும்! அது என்னமோ தெரியவில்லை எனக்கு மட்டும் செவ்வாய் கிழமையில் முடி வெட்டிக்கொள்ள தோன்றும் - போய் பார்த்தவுடன்தான் ஞாபகம் வரும், ச்சே இன்னிக்கு லீவாச்சே என்று (பெங்களூரில்!). எந்த நாளில் போனாலும், நான் போகும் நேரம் மட்டும் சலூன் நிரம்பி வழியும்!

எனக்கு ஒரு பழக்கம், சலூன் போக வேண்டுமானாலும் - குளித்துவிட்டுத்தான் போவேன்! அப்படி இருக்க - அழுக்கு ஷார்ட்ஸூம், டி-ஷர்டுமாய் வரும் ஏரியா ஆட்கள் மேல் இடிக்காமல் நாசூக்காக உட்கார்ந்து, கன்னட பேப்பரில் படம் பார்ப்பது ஒரு பெரிய கலை! அப்புறம் ஃபிலிம் ஃபேரோ , ஸ்டார் டஸ்ட்டோ  புரட்டினால், பக்கத்தில் இருக்கும் அங்கிள் படம் பார்க்க எட்டிப் பார்ப்பார்! அரை மணி நேரம் கழித்து தலையை நிமிர்த்தி பார்த்தால், நமக்கு முன் வந்து முடி வெட்டி கொண்டிருக்கும் ஆசாமிகள் இன்னமும் ஸ்திரமாக உட்கார்ந்து கொண்டிருப்பார்கள்! முடி திருத்துபவர் அப்போதுதான் இடப் பக்கம் முடித்து விட்டு, வலப்பக்கம் வந்திருப்பார்!

இன்னொரு சீட்டில், ஒரு நாற்பது வயது அங்கிள், சட்டையை ஒரு பக்கம் இறக்கி அக்குளை தூக்கி காட்டிக்கொண்டிருப்பார் - கருமமாக இருக்கும்! இதை எல்லாம் வீட்டிலேயே செய்து தொலைய வேண்டியதுதானே என்று நொந்து கொண்டு மறுபடியும் நடிகைகளின் அக்குளை பார்க்க ஸ்டார் டஸ்டில் மூழ்க வேண்டியதுதான்! FM-இல் பாட்டு அலறிக்கொண்டிருக்க, அதை விட பெரும்குரலில் அப்பாவுடன் வந்த ஒரு பொடியன் முடி வெட்ட விடாமல் அலறிக்கொண்டிருப்பான்! சிறுவயதில் நானும் நேராக கண்ணாடியை பார்த்தவாறே, விறைப்பாக உட்கார்ந்து சலூன்கரர்களிடம் நிறைய திட்டு வாங்கியிருக்கிறேன்! அப்புறம் பழகி விட்டது - கத்திரி பயணிக்கும் இடமெல்லாம் தலை தானாகவே லாவகமாக குனிந்து, நிமிர்ந்து, திரும்பி ஒத்துழைக்கிறது!

சில சமயம், காதலியை பார்க்க போகும் என்னை விட கொஞ்சம் வயதான் யூத் முகம் முழுக்க, வெள்ளையாகவோ, ரோஸாகவோ கிரீம் எதையோ  தடவிக்கொண்டு  விட்டத்தை வெறித்துக் கொண்டிருப்பார்! கிரீம் தடவுவது ஒரு ஆரம்பம்தான், அதற்கு பிறகு பல சடங்குகள் நடக்கும்! சளி பிடிக்கும் போது, டாக்டர் சொல்லி கூட ஸ்டீம் எடுத்துக்கொள்ளாத அந்த வாலிபர் ஸ்டீம் எஞ்சினுக்குள் தலையை கொடுத்துவிட்டு செல்போனில் பிஸியாகியிருப்பார்! அந்தப் பெண்ணும் அநேகமாக லக்மே பியூட்டி பார்லரில் இதையே செய்து கொண்டிருக்கக்கூடும்!

இன்னும் சில பேரின் அக்கப்போர் தாங்காது - 50 கிராம் முடியை தலையில் ஒட்டிக் கொண்டு அந்த ஸ்டைல் வேண்டும், இந்த ஸ்டைல் வேண்டும் என்று படுத்தி எடுத்துக்கொண்டிருக்க, 'பேசாமல் இவனுக்கு குருதிபுனல் ஸ்டைல் பண்ணிற வேண்டியதுதான்' என சலூன்காரர் பிளான் போட்டுக்கொண்டிருப்பார்! கிருதாவை இரு பக்கமும் ஒரே அளவாக வெட்ட சொல்லி இன்னொருவர் படாதபாடு பட்டுக்கொண்டிருப்பார், எப்படி தலையை திருப்பிப் பார்த்தாலும் அவருக்கு திருப்தி வந்திருக்காது! சலூனில் அழகாக முடி சீவி விட்டாலும், சேரை விட்டு இறங்கி இன்னொரு முறை அதை வேறு விதமாக கலைத்து விட்டு சீவிக்கொள்வது பலருக்கு பிடித்தமான ஒன்று! இன்னும் சில பேர் கண்ணாடியில் மூக்கை வைத்து அழுத்தி, நெருக்கமாக பார்த்தவாறு கண்ணில் விழுந்த முடியை வெளியில் எடுக்க போராடிக்கொண்டிருப்பார்கள்!

சில வெள்ளை முடி அங்கிள்கள், அடையாளம் தெரியாதபடி கருகரு முடியுடன் வெளியேறுவார்கள்! நமக்கே பொறாமையாக இருக்கும்! ;) 'டை போட்டுறலாமா சார்' என்று என் இளநரையை(!) சலூன்காரர் குத்திக்காட்டுவார் என்பது வேறு விஷயம்! ஹெட் மசாஜ் செய்கிறேன் பேர்வழி என்று சலூன்காரர் இடதும் வலதுமாய் கியர் போட்டதில் ஒரு சிலர் மந்திரித்து விட்ட கோழி போல் தலையை சாய்த்துக்கொண்டு போவதை பார்க்க ரொம்பவே பரிதாபமாக இருக்கும்! தலையில் வேறு 'குளிர்ச்சி, குளிர்ச்சி, கூல், கூல் எண்ணெய்' வழிந்து கொண்டிருக்கும்! ஷேவிங் செய்து கொண்டால் வேறு மாதிரியான பிரச்சினை, ரேஸரில் ரிவர்ஸ் கியர் போட்டு கன்னத்தை டேமேஜ் செய்து விடுவார்கள்!

சலூனில் மட்டும் உங்களுக்கு எப்படி முடி வெட்டிக்கொள்ள வேண்டுமோ அதை விட ஒரு படி குறைவாக வெட்டச் சொல்லவேண்டும்! இல்லை என்றால் மொட்டை அடித்து விடுவார்கள்! உதாரணத்திற்கு, உங்களுக்கு சம்மர் கட் போட வேண்டுமானால் - மீடியமா கட் பண்ணுங்க என்றும், மீடியமாக வெட்ட வேண்டுமானால் - லைட்டா கட் பண்ணுங்க என்றும், லைட்டாக முடி வெட்டிக்கொள்ள வேண்டுமானால் - ட்ரிம் பண்ணுங்க என்றும் சொல்ல வேண்டும்! அடுத்த வாரம் ஏதாவது ஒரு திருமணத்திற்கு போக வேண்டிய நிலைமையில், நீங்கள் இதை பின் பற்றாமல், ஆணவமாக மீடியம் கட் என்று திருவாய் மலர்ந்தருளினால், திருமண நிகழ்ச்சியின் பொது ராணுவ வீரர் போல் சுற்ற வேண்டியதுதான்! :)

முடி வெட்டிக்கொள்ளும் போது மகா கடுப்பாக்கும் ஒரு விஷயமிருக்கிறது! காதை சுற்றியுள்ள முடியை வெட்டும் போது நமது காதை மடக்கி, கிருதாவின் மேல் வைத்து அழுத்தி பிடித்துக்கொண்டு வெட்டுவார்கள் பாருங்கள் - எழுந்து ஓடி விடலாம் போலிருக்கும். ஒவ்வொரு காதுக்கும் இரண்டு மூன்று நிமிடங்கள் ஆகும் போது, பேசாமல் ஒரு வாய், ஒரு ஒரு மூக்கு போல, காதும் ஒன்று மட்டும் - அதுவும் மூக்குக்கும் வாய்க்கும் இடைப்பட்ட பிரதேசத்தில், மீசைக்கு பதிலாக வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என Sci-Fi ரேஞ்சில் சிந்தனைகள் ஓடும்! அப்படி இருந்தால் காது மடலை வைத்து வாயை எளிதாக மூடிக்கொள்ளலாம் என்பது கூடுதல் வசதி!

நெற்றிக்கு மேல் முடி வெட்டும் போது கண்களை இறுக்க மூடவில்லையானால், நாமும் கண்ணாடியில் மூக்கை அழுத்தி கண்ணில் விழுந்த முடியை தேட வேண்டியிருக்கும்! கொடுத்த காசுக்கு கூடுதலாக வெட்டி விட்டு, கையில் ஒரு கண்ணாடியை வைத்துக்கொண்டு, தலைக்கு பின்னால் சுற்றிக் காட்டி சரியாக இருக்கிறதா என்று சம்பிரதாயத்திற்கு கேட்பார்கள். சில வக்கிரபுத்தி சலூன்காரர்கள் உங்கள் உச்சந்தலையில் முடி அடர்த்தி குறைவாக இருக்கும் பட்சத்தில், அதை ஃபோகஸ் செய்து காட்டி கடுப்பேற்றுவார்கள்! அதை கண்டு கொள்ளாமல், எல்லாம் சரியாக இருக்கிறது என்று தலையை ஆட்டி விட்டு கிளம்பினால் உங்கள் முடி வளரும் வேகத்தை பொருத்து அடுத்த ஒரு மாதத்திலிருந்து மூன்று மாதம் வரை கவலையில்லை! ;)

ஒரு மாறுதலுக்காக சில வருடங்கள் முன், தொடர்ந்து சில மாதங்கள் தெரு முக்கு சலூனுக்கு செல்லாமல், அப்பாய்ன்ட்மென்ட் வாங்கிக்கொண்டு, பிரபல Unisex பார்லருக்கு சென்றதில் அடுத்த சில வருடங்களுக்கான ஹேர் கட் செலவை அந்த ஒரு சில மாதங்களிலேயே இழந்ததுதான் மிச்சம்! ரிசப்ஷனில் ஒரு அழகிய பெண், குளிரூட்டப்பட்ட அறை, பின்னணியில் இழையும் சுகமான இசை, சீருடையுடன் முடி திருத்துபவர், பக்கத்து சீட்டில் ஃபேசியல் செய்து கொள்ளும் ஒரு சுமாரான ஃபிகர், என்று பல வசதிகள் இருந்தும், காதை அங்கேயும் பலமாகவே அமுக்கினார்கள் என்பதால் - நான் ஐம்பது ரூபாய்க்கே கியூவில் அமர்ந்து அமுக்கிக் கொள்கிறேன் என்று ஓடி வந்து விட்டேன்! சலூனுக்கு முடி வெட்டிக்கொள்ள குளித்து விட்டும் செல்லும் பழக்கம் இங்கே செல்லும் போதுதான் ஏற்பட்டது என்பதும், ஃபேசியல் முடிந்ததும் சுமார் ஃபிகர் - சூப்பர் ஃபிகராக மாறுவதும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விஷயங்கள்! ;)!

எதற்கெதற்கோ ஆட்டோமாடிக் மெஷின்கள் வருகிறது - முடி வெட்டவும் ஒன்று வந்து விட்டால் அதில் தலையை கொடுக்க நான் ரெடி! அதில் காதை அமுக்கிப் பிடிக்கும் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங், எளிதாக கழட்டி வைக்க கூடியதாக இருக்க வேண்டியது அவசியம்!

கருத்துகள்

  1. /எனக்கு ஒரு பழக்கம், சலூன் போக வேண்டுமானாலும் - குளித்துவிட்டுத்தான் போவேன்!//முடி வெட்டிய பிறகு?

    பதிலளிநீக்கு
  2. @Prem: இன்னொரு தடவை குளியல்! :)

    பதிலளிநீக்கு
  3. உங்கள் நகைச்சுவை வழிந்தோடும் எழுத்து நடை அருமை அன்பரே தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  4. நல்லாவே இருந்துச்சு நானும் நீங்கள் கூறியபடி சலூன் செய்து உள்ளேன் நீங்கள் என்னை தான் கூறி வைத்து சொல்லுரின்களோ நினைத்தேன்...///டாக்டர் சொல்லி கூட ஸ்டீம் எடுத்துக்கொள்ளாத அந்த வாலிபர் ஸ்டீம் எஞ்சினுக்குள் தலையை கொடுத்துவிட்டு செல்போனில் பிஸியாகியிருப்பார்! அந்தப் பெண்ணும் அநேகமாக லக்மே பியூட்டி பார்லரில் இதையே செய்து கொண்டிருக்கக்கூடும்!/// ஹா ஹா

    பதிலளிநீக்கு
  5. மீண்டும் ஒரு சரளமான கலக்கல் காமெடி பதிவு :)

    பதிலளிநீக்கு
  6. இப்படியான சிந்தனைகளை, சிரித்துக் கொண்டே படிக்க வைத்துவிட்டீர்கள்...

    பதிலளிநீக்கு
  7. @Prem - thanks!

    @Chinnamalai: நீங்கன்னு இல்ல, உங்களை மாதிரி பலபேர் ஊர்ல சுத்துறாங்க ;)

    @வரலாற்று சுவடுகள்: நன்றி நண்பா! ஆனால், கொஞ்சம் நீளமாகிவிட்டது! :)

    @NIZAMUDEEN: படிக்கும் போது உங்கள் சலூனாபவங்கள் ஞாபகம் வந்து விட்டதோ?! :)

    பதிலளிநீக்கு
  8. @ தமிழ்வாசி பிரகாஷ்: நன்றி நண்பரே! :)

    பதிலளிநீக்கு
  9. எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ. உங்களால மட்டுமே முடியும். ஆனா நல்ல இருக்கு. கலக்குங்க.

    பதிலளிநீக்கு
  10. //சலூனுக்கு முடி வெட்டிக்கொள்ள குளித்து விட்டும் செல்லும் பழக்கம் இங்கே செல்லும் போதுதான் ஏற்பட்டது என்பது வேறு விஷயம்! //

    அதானே பார்த்தேன் சோழியன் குடும்பி சும்மா ஆடுமா? ;) ஒரு பிகரைப் பார்த்தா நம்ப பசங்க என்னன்மோ பண்ணுறாங்கப்பா ;]

    பதிலளிநீக்கு
  11. @Tamil Comics - SoundarSS: நன்றி நண்பரே! சலூனில் வெட்டியாக வெயிட் செய்தால் இப்படிதான் தாறுமாறாக சிந்தனைகள் ஓடும் :)

    @Mayu Mayooresan: நீங்கள் குறிப்பிடும் அந்த பகுதி பதிவில் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது! ;)

    பதிலளிநீக்கு
  12. நான் சிறு வயதில் எங்க தாத்தா வீட்டுக்கு செல்லும் பொழுது முடிவெட்டாமல் சென்றால் ஒருசலூன் கடைக்கு கூட்டி சென்று அப்படி வெட்டு இப்படி வெட்டு என்று பாடாய் படுத்தி விடுவார் , மொட்டை அடிக்காத குறைதான் . ஒரு காமடி நிகழ்வுதான் . விரைவில் காமடி பாணியில் ஒரு Bladeo வில் ஒரு குட்டி படம் போடுங்கள்

    .
    //கருமமாக இருக்கும்! இதை எல்லாம் வீட்டிலேயே செய்து தொலைய வேண்டியதுதானே //
    இது மட்டும் கொஞ்சம் சரியாக எழுதியிருக்கலாம்

    பதிலளிநீக்கு
  13. @Stalin: சிறுவயது நினைவுகளில் சலூன் ஒரு 'வெட்ட' முடியாத அங்கம்தான்! ;)

    // இது மட்டும் கொஞ்சம் சரியாக எழுதியிருக்கலாம்//
    புரியவில்லை, எந்த விதத்தில் நண்பரே? :)

    பதிலளிநீக்கு
  14. பதில்கள்
    1. ஆம் நண்பரே! :)

      இனி மீள்பதிவுகள் தொடரும்! தமிழ்நாட்டின் கடைசி குடிமகனுக்கும் எனது பதிவுகள் போய்ச் சேரவேண்டும்! :D

      நீக்கு
  15. அதிலும் கொஞ்சம் சிரிச்ச முகமா இருந்துட்டா புதுசா இருக்கற பசங்களுக்கு நம்ம தலைதான் ட்ரைனிங் சென்டர். அதிலயும் ஷேவ் பண்ண போயிட்டா அவ்ளோதான் கிருதா காதுக்கு மேல போயிடும், மீசை அது நேயர் விருப்பம் ஆகிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ளாக்கர் நண்பன் மூலம் கிடைத்த முதல் கஸ்டமர்! ;)

      நீக்கு
  16. //எப்படித்தான் எல்லாருக்கும் சனி, ஞாயிறு காலையில் மட்டும் முடி வெட்டிக்கொள்ள வேண்டும் என்ற ஞானோதயம் பிறக்குமோ தெரியவில்லை!//

    சரியாகச் சொன்னீர்கள். இதில் பட்ட அவஸ்தையினால் தான் பத்து வருடங்களுக்கு மேலாக ஞாயிறன்று மருந்துக்குக் கூட கடைப்பக்கம் திரும்புவதில்லை. (எங்கள் பகுதியில் சனியன்று கூட்டம் அவ்வளவாக இருக்காது)

    பதிலளிநீக்கு
  17. சலூன் பிளேடு செம செம ...!

    சலூனுக்கு முடிவெட்டிக்க வர்றவங்க பெரும்பாலும் தூங்கி எந்திரிச்சு அப்டியே வந்தர்றாங்க , அப்புறம் இருக்குரதுலையே ரெம்ப அழுக்கான ஒரு டிரெஸ்ச போட்டுட்டு தான் வர்றாங்க, நெருங்கி நின்னு முடிவெட்டுறது ரெம்பவே சிரமா இருக்குன்னு சில வருடங்களுக்கு முன் ஒரு சலூன்கடைகாரர் வருத்தப்பட்டு வார இதழொன்றில் எழுதி இருந்தார் . அன்றிலிருந்து குளித்து, சென்ட் போட்டு , துவைத்த உடை அணிந்தே சலூன் சென்று கொண்டிருக்கின்றேன் .

    ஹாஸ்பிட்டல்லயும் , சலூன்லையும் காத்திருக்கிரதுதான் காத்திருப்புகளிலேயே மிக கொடுமையானது .

    சலூன்ல போயி ட்ரிம் பண்ணிக்குறதுங்குறது சூசைட் பண்ணிக்குரதுக்கான ஒரு முன்னோட்டம் மாதிரிதான். சங்குல சடுகுடு ஆடிடுவாங்கலோன்னு ஒரு பீதி எப்பவுமே இருக்கத்தான் செய்யுது . சில கடைகள்ல மொன்ன பிளேட போட்டு டிரிம் பண்ணுவாங்க பாருங்க ...அப்டியே கட்டிங் பிளேயரால புடுங்குற மாதிரியே இருக்கும் . பிதாமகன் விக்ரம் மாதிரி தெறிச்சு ஓடிடுவேன் .

    எவ்ளோதான் நல்லா வெட்டுனாலும் டிவி இருக்குற கட பக்கம் தலைமுடி கூட வச்சுப்படுக்கமாட்டேன் . ஏன்னா உசுரு ரெம்ப முக்கியம் பாஸு ...!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia